இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், பிரகாஷ் ராஜ், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள திரைப்படம் தான் தேவரா.
சரக்கு கப்பல்களில் கொள்ளையடிக்கும் கூட்டத்தை சேர்ந்த நபராக தேவரா எனும் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முருகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள முரளி ஷர்மாவுக்கு கடத்தல் பொருட்களை தனது கூட்டத்தினருடன் சேர்ந்து விற்று சட்ட விரோத பிசினஸ் செய்து வருகிறார். ஆனால், ஒரு கட்டத்தில் இதெல்லாம் தவறு என்பதை அறிந்துக் கொள்ளும் தேவரா அந்த தொழிலை கை விடுகிறார். ஆனால், தேவராவின் கூட்டத்தில் இருக்கும் பைரா (சைஃப் அலி கான்) அதனை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளும் கடைசியில் என்ன ஆகிறது என்பதும் தான் இந்த தேவரா படத்தின் கதை.
ஜூனியர் என்டிஆர் தன்னுடைய நடிப்பால் இந்த கதையை தாங்கிப் பிடிக்கிறார். நடிகை ஜான்வி கபூர் வெறும் இளமைக்கும் கவர்ச்சிக்கும் என்று இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வருகிறார். பெரிதாக ஜொலிக்கவில்லை.
பிரகாஷ்ராஜ் படத்தில் ஜூனியர் என்டிஆர் பற்றி பில்டப் பண்ணி சொல்வதற்காக மட்டுமே வருகிறார்.
முதல் பகுதியில் வேகம் எடுத்தும் கதை இரண்டாம் பாதையில் நகராமல் ஒரே இடத்தில் படுத்து தூங்கி விடுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதிகப்படியான கதாபாத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகும் இயக்குநர் எந்தவொரு கதாபாத்திரத்துக்கும் ஆழமாகவோ அழுத்தமாகவோ திரைக்கதையை வடிவமைக்காதது தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அந்த ஆயுத பூஜை பாடல் உள்ளது. ஜான்வி கபூர் ரசிகர்களுக்கு சுட்டாமல்லி பாடலும் கை கொடுத்துள்ளது.
அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடிப்பு தான் இந்த படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடிக்கிறது. அண்டர்வாட்டர் சீக்வென்ஸ், ரத்னவேலுவின் ஒளிப்பதிவு எல்லாமே தரமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை படத்திற்கு பெரியளவில் பலம் சேர்க்கவில்லை.
க்ரீன் மேட், சிஜி, மெகா பட்ஜெட் என காசை வாரி இரைத்திருந்தாலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் கொரட்டலா சிவா கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டு விட்டார் என்பது தான் நிதர்சனம். ஆக மொத்தத்தில் தேவரா படம் ஒரு தெலுங்கு படம் என்ற மன ஓட்டத்தில் படத்தைப் பார்த்தால் பெரிதாக குறைகள் தெரியாது, ஆனால் ஒரு தமிழ் படம் என்ற மன ஓட்டத்தில் பார்த்தால் பார்ப்பது எல்லாமே குறையாக மட்டுமே தெரியும்.

