

tamil news ➔ kollywood newsBy sivan|2024-09-24
துருவ்விக்ரம் பிறந்தநாளுக்கு பைசன் படத்தின் போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காலை முதலே சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் எளிய மக்களின் வாழ்வியல் கதைகளை சாதிய தாக்கத்துடன் சொல்லி வருகிறார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், வெற்றி இயக்குநராகவே மாறியுள்ளார் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை படங்கள் வெற்றிப் பெற்ற நிலையில், துருவ் விக்ரமின் பைசன் படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சியான் விக்ரம் மற்றும் ஷைலஜா தம்பதியினரின் மகனான துருவ் விக்ரம் கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் பிறந்தார். இன்று தனது 27வது பிறந்தநாளை துருவ் விக்ரம் கொண்டாடி வருகிறார். அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்த அவர் அதன் பின்னர் லண்டனில் உள்ள மெட் ஃபிலிம் பள்ளியிலும் சினிமாவை கற்றுக் கொண்டு ஹீரோவாக ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார்.
வாரிசு நடிகராக சினிமாவில் எளிதில் என்ட்ரி கொடுத்து விடலாம் என நினைத்த துருவ் விக்ரமுக்கு முதல் படத்திலேயே பாலா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என ரீமேக் செய்தார் பாலா. ஆனால், அந்த படம் சரியாக வரவில்லை என நினைத்து மீண்டும் கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் நடித்து அறிமுகமானார். ஆனால், அந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த மகான் படத்தில் அப்பாவுடன் இணைந்து அவருடன் மோதும் காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார் துருவ் விக்ரம். ஆனால், அந்த படம் தியேட்டர்களில் வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. துருவ் விக்ரம் தனியாக தனது திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மாரி செல்வராஜின் பைசன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
துருவ் விக்ரம், இந்தப் படத்தில் பைசன் (காளமாடன்) எனும் கபடி வீரராக நடிக்கிறார். அந்த படத்துக்காக கபடி வீரராகவே பயிற்சி எடுத்து நடித்து வருகிறார். கண்டிப்பாக பைசன் படம் துருவ் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


