
tamil news ➔ kollywood newsBy sivan|2025-04-28
சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். வரும் மே மாதம் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் ராஜு முருகன், சமுத்திரகனி, மணிகண்டன், த செ ஞானவேல், ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருமே டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்தும் அதன் இயக்குநர் குறித்தும் ஜாலியாக புகழ்ந்து பேசினர்.
நடிகர் மணிகண்டன் பேசியபோது, "டூரிஸ்ட் ஃபேமிலி' படம் ரெடியான இந்த இரண்டு வாரத்தில் படம் பற்றி நிறைய நல்ல விசயங்களைக் கேட்க முடிகிறது. ஆனால் எனக்கு 1.5 வருடங்களுக்கு முன்பே இந்தப்படம் பற்றித் தெரியும். அதாவது இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முழு ஸ்கிரிப்டையும் எனக்குச் சொன்ன போதே மிரட்டலாக இருந்தது. அவர் கதை சொல்வதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சசி சாரைத் தவிர வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துப் பார்க்க முடியவில்லை படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும். இசையமைப்பாளர் ஷான் நல்ல நண்பர் மணிக்கணக்கில் அவருடன் போனில் பேசுவேன், அவர் மனைவி திட்டுவார். இப்படத்தில் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு கதையை நம்பி தயாரிப்பது அத்தனை எளிதான விசயமல்ல, ஆனால் அதை மிக எளிதாக மில்லியன் டாலர் சாதித்துள்ளனர். கண்டிப்பாக இந்தப்படம் பார்க்கும் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி" என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சில மாதங்களுக்கு முன்பு, இலங்கையைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்தார்கள். நாங்கள் இங்கு வந்து 35 வருடங்கள் ஆகின்றன, ஆனால் எங்களுக்கு இன்னும் ஒரு மரியாதைக்குரிய அடையாளம் கிடைக்கவில்லை என்று அவர்கள் கவலையுடன் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.
அந்த வலி இந்தப்படம் பார்க்கும் போது புரிந்தது. இந்த படத்தைத் தாண்டி அபிஷன் ஜீவிந்த் பெரிய வெற்றியைப் பெற முடியாது. சசிகுமாருக்கு சுப்பிரமணியபுரம் என்றால், எனக்கு நாடோடிகள், அது போல அபிஷனுக்கு இந்த டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும். இதை விடச் சிறந்த படத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. நாடோடிகள் வெளியானபோது, கேபி சார் என்னுடன் சேர்ந்து அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தார். நாங்கள் ஒரு தியேட்டருக்குச் சென்றோம், பார்வையாளர்கள் டைட்டிலுக்கே கைதட்டினார்கள், கேபி சார் என்னை நோக்கித் திரும்பி, அவர்கள் அனைவரும் ஏன் டைட்டிலுக்கு ஆரவாரம் செய்கிறார்கள் என்று கேட்டார்.
எனக்கும் அது புரியவில்லை. படம் வரும் படத்தின் மீது மக்களுக்கு நல்ல அன்பு இருந்தது. இந்தப் படத்திற்கும் அந்த மேஜிக் நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தில் பல காட்சிகளை மறக்க முடியவில்லை, படத்தில் ஒரு நாய் கூட அற்புதமாக நடித்துள்ளது. படத்தைப் பார்த்த பிறகு, அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் இருந்தேன், மேலும் ஒரு சிறிய பகுதியிலாவது என்னை டப்பிங் கலைஞராக்குமாறு குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன் ஆனால் படத்தை முடித்துவிட்டார்கள். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றியைக் குவிக்கும் நன்றி." என்றார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர், தனது காதலிக்கு மேடையில் ப்ரப்போஸ் செய்தது, சுற்றியிருந்த பிரபலங்கள் அதை பார்த்து வெட்கப்பட்டதை பார்க்கவே மனதிற்கு நெகிழ்வாக இருப்பதாக சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
