பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கவின் நாயகனாக நடிக்கும் 11வது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதல் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்த கவின், இம்முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கிறார். சமகால வாழ்க்கை முறை மற்றும் உறவுகளின் நுணுக்கங்களை பேசும் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகிறது. தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இப்படத்தை இயக்குகிறார். சுஷ்மா சினி ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்க, ரெடாக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்சன் இணை தயாரிப்பாளராக உள்ளார். படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும், இப்படம் குறித்த மேலும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.