
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy Ottran Dorai|2025-07-11
"ஓஹோ எந்தன் பேபி" திரை விமர்சனம்
2025 ஆம் ஆண்டின் காதல் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமான 'ஓஹோ எந்தன் பேபி', இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ருத்ரா மற்றும் மிதிலா பால்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, நிர்மல் பிள்ளை உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் அவரவராகவே நடித்துள்ளனர்.
சினிமாவில் ஒரு இயக்குநராக நுழைய ஆர்வமுள்ள அஷ்வின் (ருத்ரா), தனது திறமையை ஒரு முன்னணி நடிகரிடம் நிரூபிக்க தனது சொந்த காதல் கதையை விவரிக்கத் தொடங்குகிறார். ஆனால் அக் காதல் கதை ஒரு சோகமான முடிவை எட்டவே, நடிகர் அதன் முடிவை மாற்றி எழுதும்படி அறிவுறுத்துகிறார். அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களே கதையின் மையக்கரு.
திரைக்கதையில் விஜய், அஜித், இயக்குனர் அட்லீ, மற்றும் ரவி மோகனின் நண்பர் கெனிஷா போன்ற பிரபலங்களின் பெயர்கள் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு இவர்களுடன் ஏதேனும் தனிப்பட்ட கசப்பான அனுபவங்கள் இருந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்படுகிறது. அறிமுக நடிகர் ருத்ராவின் நடிப்பு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. குறிப்பாக காதல் காட்சிகளில் அவருடைய உடல் மொழி, நடிப்பு நன்றாகவே இருக்கிறது. கதாநாயகி மிதிலா பால்கர் தனது கதாபாத்திரத்தை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். ரெடின் கிங்ஸ்லியின் வசன உச்சரிப்பு பாராட்டத்தக்கது. கருணாகரன் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்துகிறார். நிர்மல் பிள்ளை உட்பட மற்ற நடிகர்களின் பங்களிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது மற்றும் அவர்களின் நடிப்பு குறை சொல்லும்படி இல்லாமல் நேர்த்தியாக இருக்கிறது. மிஷ்கின் மற்றும் விஷ்ணு விஷால் அவரவராகவே வந்து படத்தில் நையாண்டி செய்கிறார்கள்.
இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் திரைப்படம் மேலும் மெருகேறியிருக்கும். அதேபோல, எடிட்டர் பிரணவ் இரண்டாம் பாதியில் சற்று கவனம் செலுத்தி படத்தை இன்னும் சுவாரசியமாக கொடுத்திருக்கலாம். ஜென் மார்டினின் இசை, நேர்த்தியான பின்னணி இசையுடன் கதையின் உணர்வுபூர்வமான தருணங்களுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு பக்கம் சேர்கிறது.
'ஓஹோ எந்தன் பேபி' இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் நடத்தை மற்றும் உணர்வுகளுடன் பின்னப்பட்ட ஓர் காதல் திரைப்படமாக தெரிகிறது. சில இடங்களில் காட்சிகளில் தொய்வு இருந்தாலும், பார்வையாளர்கள் காதலின் சுவாரஸ்யத்தை ரசிக்கிறார்கள்.
தணிக்கைக் குழுவினரால் இப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் கொடுத்திருப்பதால், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை திரையரங்கில் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு: 3/5
