
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy Ottran Dorai|2025-12-25
அதிரடி ரசிகர்களுக்கு ஏற்ற, நேர்த்தியான இரட்டை வேட முயற்சி - ரெட்ட தல திரை விமர்சனம்
அதிரடி மற்றும் மர்மம் கலந்த வணிகத் திரைப்படமாக ‘ரெட்ட தல’ உருவாகியுள்ளது. இரட்டை வேடம் என்ற சுவாரசியமான அம்சத்தை மையமாக வைத்து, வேகமான திரைக்கதை மற்றும் தொடர்ச்சியான சம்பவங்களுடன் படம் நகர்கிறது. தொடக்கத்திலேயே பார்வையாளர்களை உள்ளிழுக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதுடன், மையக் குழப்பம் படிப்படியாக விரிகிறது.
இரட்டை வேடத்தில் நடித்துள்ள அருண் விஜய் தன் உடல் மொழி, முகபாவனை மற்றும் ஆக்ஷன் ஈடுபாட்டின் மூலம் இரண்டு கதாபாத்திரங்களையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் தீவிரம் படத்தின் முக்கிய பலமாக மாறுகிறது. நாயகிகளாக சித்தி இட்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, கதையின் ஓட்டத்திற்கு துணை நிற்கின்றனர். வில்லன் கதாபாதிரத்தில் ஹரீஷ் பெராடி தன்னுடைய அனுபவமான நடிப்பால் எதிர்மறை பாத்திரங்களுக்கு தேவையான வலுவை வழங்குகின்றனர். காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய் தனது அருவருக்கத்தக்க நடிப்பினால் பார்வையாளர்களை வெறுப்படைய செய்கிறார். படங்களில் ஜான் விஜயை தவிற்பது படத்துக்கு பிளஸ் ஆக அமையக்கூடும்.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன், கதையை மிகச் சிக்கலாக்காமல் நேரடி சொல்லாக்கத்தில் எடுத்துச் செல்வதைத் தேர்வு செய்துள்ளார். ஆக்ஷனை மையமாக வைத்து படம் நகர்வதால், சில இடங்களில் ஆழமான கதாபாத்திர வளர்ச்சி குறைவாக இருந்தாலும், வேகம் குறையாமல் திரைக்கதை அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி காட்சிகளை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்; குறிப்பாக இரவு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் பார்வைக்கு ஈர்ப்பாக அமைந்துள்ளன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை மூலம் காட்சிகளின் தீவிரத்தை உயர்த்தி, படத்தின் மொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறார். ஆண்டனியின் படத்தொகுப்பு படத்திற்கு தேவையான வேகத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
மொத்தத்தில், ‘ரெட்ட தல’ பெரிய பரிசோதனை இல்லாவிட்டாலும், இரட்டை வேடம், உறுதியான நடிப்பு, தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றால் ஒரு திருப்திகரமான வணிகத் திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. அதிரடி ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல தேர்வாக அமையும்.
மதிப்பீடு: 3/5
