நடிகர் சார்லி, அதிதிபாலன், திரிகன் சரண்யா ரவிச்சந்திரன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர்கள் வினோத் சேகர் மற்றும் தினகர் பாபு இயக்கத்தில் OTT தளத்தில் வெளியாகி இருக்கும் படம்.
தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்களின் பெரும்பான்மையான வாழ்வாதாரம் உப்பளத்தில் வேலை பார்ப்பது தான். ஆனால் அந்த உப்பளத்தில் நடக்கும் அவலங்கள், ஆதிக்க வர்க்கங்கள் எப்படி அவர்களை ஒடுக்குகின்றன என்பதைப் பற்றி மட்டும் பேசாமல், அதில் ஒரு படித்த இளைஞன், அந்த ஊருக்கும், இந்த நாட்டுக்கும் தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் இந்திய அரங்கிற்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பது தான் இந்த படத்தின் கதை கரு.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதை.
நடிகர் சார்லி இந்த படத்தில் மிரட்டியுள்ளார். கதையின் நாயகனும் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். எதிர்மறை கதாநாயகனும் அப்பட்டமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதனால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் போனது ஏமாற்றமே! திரைக்கதையை விறுவிறுப்பாக்கி இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்த சினிமாவை வணிகரீதியாக எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குனர்கள் நினைத்தார்களா என்று தெரியவில்லை, சில பல கிளை கதைகளும் ஊடாடுகின்றன. ஓ டி டி தளத்தில் தான் இந்த படம் வெளியாக போகிறது என்று தெரிந்திருந்தால், இந்த காட்சிகளை எடிட் செய்து இருந்திருக்கலாம்.
படத்தின் இசையும் கவனத்தை ஈர்க்கவில்லை.
ஒளிப்பதிவாளர் இந்த படத்திற்காக Live location ல் எடுக்க மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் என்று படம் பார்க்கும்போது நமக்கே புரியும்.
அதேபோன்று படத்தின் வசனத்திலும் இன்னும் ஒரு அழுத்தத்தை கொடுத்து இருந்திருக்கலாம்.
அதிதி பாலன் ஒரு காட்சிக்கு மட்டுமே வந்தாலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
ஆக மொத்தத்தில் லைன் மேன் படம் அழுத்தம் இல்லாத, விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை தான் என்றாலும், ஒரு நல்ல சமூக கருத்தை வலியுறுத்துகிற படம் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்ளலாம்.

