
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy sivan|2025-08-01
House Mates திரை விமர்சனம்
'கனா' பட புகழ் தர்ஷன், ஹர்ஷா சாந்தினி பைஜு, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், விஜய் டிவி புகழ் தீனா ஆகியோரின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான SK ப்ரோடுக்க்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் படம்.
தன்னுடைய காதலிக்காக பழைய அப்பார்ட்மெண்ட் ஒன்றை விலைக்கு வாங்கும் தர்ஷன் தனது காதலியான ஹர்ஷா சாந்தினி உடன் பதிவு திருமணம் செய்து கொண்டு குடியேறுகிறார். தர்ஷன் வேலைக்கு செல்வதால் வீட்டில் இருக்கும் ஹர்ஷாவுக்கு சில அமானுஷ்யமான விஷயங்கள் எல்லாம் தென்படுகிறது. இதை தர்ஷனிடம் சொல்ல அவரோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
ஆனால் அதே நேரத்தில் இன்னொரு வீட்டில் ஒரு சின்ன பையனுக்கும் அதே மாதிரியான அமானுஷ்யமான விஷயங்கள் தென்படுகிறது. இதைப் பார்த்த அவரது அப்பா அம்மாவான காளி வெங்கட் மற்றும் வினோதினி ஆகிய இருவரும் மருத்துவ ஆலோசனை மற்றும் பேய் ஓட்டும் சாமியார் என்று அனைவரையும் கூட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் இங்கும் தர்ஷன் சில விஷயங்களை நம்பி அதேபோல் சில விஷயங்களை செய்ய இருவருக்கும் இடையே, ஒரு சுவற்றில் சில எழுத்துக்கள் தெரிகின்றன. அதிலிருந்து இவர்கள் யார் எதனால் ஒரே இடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதன் நீட்சியே ஹவுஸ் மேட்ஸ் படத்தின் கதை கரு.
நடிகர்களைப் பொருத்தவரையில் காளி வெங்கட் தரமாக நடித்திருக்கிறார். வினோதினி வழக்கம்போல் ஓவர் ஆக்டிங், தர்ஷன் நடிப்பை மெருகேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஹர்ஷாவின் நடிப்பில் கண்கள் மட்டுமே அழகு .
திரைக்கதையை பொறுத்த வரையில் முதல் பாதியில் நிறைய விறுவிறுப்பான காட்சிகள் இருந்தாலும், இரண்டாம் பாதி அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சி நிறைய விஷயங்களில் சொதப்பு சொதப்பு சொதப்புகிறது. இதனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் காணாமல் போய்விடுகிறது.
இந்தப் படத்தின் வசனங்கள் எதார்த்தமாக இருப்பது படத்திற்கு அழகு சேர்க்கிறது. அதிலும் அறிவியல் ரீதியான சில விஷயங்களை பேசும்போது எதார்த்தம் வேண்டும் என்று வசனகர்த்தா பார்த்து பார்த்து எழுதியிருப்பது பெருமையான விஷயம்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய இரண்டு விஷயங்கள் மட்டுமே. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதையும் தாண்டி அதற்குள் எந்த ஒரு கன்டினியுட்டி மிஸ் ஆகக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனரும் காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எடிட்டர் அதை தத்துரூபமாக பார்வையாளருக்கு புரியும் விதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அடுத்த கூடுதல் பலம் படத்தின் பின்னணி இசை.
இவை அனைத்தும் இருந்தாலும் இறுதி காட்சியின் மீண்டும் ஒரு குழப்பமான ஒரு விஷயத்தை பேசுவது கதையில் இன்னும் தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.
ஆக மொத்தத்தில் ஹவுஸ் மேட்ஸ் படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு கலாட்டாவான படம்.
