லிஜோ மோல், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் இ ன்னும் பல நட்சத்திரங்களில் நடிப்பில், இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம். ஒரு கள்ளக்காதல் வாழ்க்கை,இரண்டு பெண்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் பாதிக்கப்பட வைக்கிறது என்பதே படத்தின் மையக்கரு. 'ஜெய் பீம்' படப்புகழ் லிஜோ மோல் தன்னுடைய எதார்த்தமான, அப்பாவித்தனமான அதே சமயம் வில்லத் தனமான நடிப்பை ஒருங்கிணைத்து நடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதுவரை பார்த்த லாஸ்லியாவை இந்த படத்தில் நீங்கள் பார்க்க வாய்ப்பில்லை. நடிப்பில் ஒரு படி மெருகேறி இருக்கிறார். கதாநாயகனான ஹரி கிருஷ்ணன் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு. படத்தின் முதல் பாதி போன வேகம் தெரியவில்லை படத்தின் நீளம் குறைவு என்பதனாலா அல்லது படத்தின் திரைக்கதை அவ்வளவு விறுவிறுப்பாக எழுதப்பட்டதன்னால்லா என்பது ரசிகர்கள் பார்ப்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருக்கிறது. அங்கங்கே நிறைய லாஜிக் ஓட்டைகளும் இருக்கின்றன. இருந்தாலும் இவர்களின் நடிப்பு, இந்த லாஜிக் ஓட்டைகளை எல்லாம் கேட்பார்அற்று, கவனிப்பாரற்று இருப்பது போல் உள்ளன. கோவிந்த் வசந்தாவினால் படத்தின் பின்னணி இசை மிகவும் ருசிகரமாக உள்ளது. அதேபோல் ஒளிப்பதிவாளர் சா கதிரவனின் ஒளிப்பதிவு, வித்தியாசமான காட்சிகளை நமக்கு காட்டுகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமனை பற்றிப் பேசிய ஆக வேண்டும். பொதுவாக ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறும் பழமொழி மரபு வாய்ந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஒவ்வொரு பெண்ணின் சோகத்திற்கு பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான் என்பதை உரக்கச் சொல்லி இருக்கிறார். படத்தை பட்ஜெட்டில் எடுத்தாலும் தேவையில்லாத காட்சிகளும் வணிக ரீதியான காட்சிகளும் புகுத்தப்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு. ஆக மொத்தத்தில் Gentlewomen படம் பார்ப்பதற்கு அருமையான படம் என்றாலும் பார்க்க மக்கள் வருவார்களா என்பது கேள்விக்குறிதான்?