
tamil news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-09-13
ARM திரை விமர்சனம்.
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகரான டொவினோ தாமஸ்ஸின் ஐம்பதாவது படமாக உருவாகி இருப்பது தான் ARM.
மலையாளம் தமிழ் ஹிந்தி என பழமொழிகளில் இந்த படம் நேற்று வெளியானது.
மூன்று வெவ்வேறு காலங்களில், ஒரு மனிதன் அவனது முன்னோர் எப்படி வெவ்வேறு விதமாக பார்க்கப்படுகிறார்கள், ஆனால் அனைத்து காலங்களிலும் ஜாதிய ஒடுக்கு முறையால் அந்த ஊரில் வாழும் மக்கள் அனைவரும் ஒதுங்கி இருப்பதும் அவர்கள் அனைவரையும் எப்படி ஒருங்கிணைக்கிறான் கதாநாயகன் என்பதுதான் படத்தின் கதை.
மாரி 2 படத்தில் டொவினோ தாமஸ் ஒரு வில்லனாக காட்டி, அவரை கடைசியில் ஒரு காமெடியனாகவே செய்திருப்பார்கள். அதனால் இந்த படம் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லாமலே தான் இருந்தது. ஆனாலும் வேறு படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் போய் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
பார்த்த பின்பு தான் தெரிந்தது, டொவினோ தாமஸ்ஸை தமிழ் சினிமா உலகம் தான் பயன்படுத்தாமல் விட்டுவிட்டது என்று. மனிதன் இந்தப் படத்தில் அப்படி ஒரு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தில் களரி வீரனாக வரும் இவர், களரி வீரனின் உடல் அசைவுகள் எந்தெந்தவாறு இருக்கும் என்று அதற்கேற்றார் போல் படம் முழுவதும் நகர்த்திச் சென்று இருக்கிறார்.
படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், மணியன் கதாபாத்திரத்தில் வரும் டொவினோ தாமஸ்ஸின் மனைவி கதாபாத்திரம் மனதில் பளிச்சிடுகிறது.
படத்தின் ஒளிப்பதிவும், இயக்குனர் ஜித்தின் லால்லின் ஃபிலிம் மேக்கிங் சென்ஸ் படத்தை ஒரு படி மேலே உயர்த்தி காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் என திபு நினன் தாமஸ், காட்சிகளுக்கு ஏற்ப இசை அமைத்தது அருமை.
படத்தின் முதல் பாதி அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது. ஆனால் அது இந்த கதைக்கு தேவையான ஒன்றுதான்.
இந்த படம் ஜாதிய ஒடுக்கு முறையைப் பற்றியும் பேசுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட திணிக்கவே இல்லை. தமிழில் ஜாதிய படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் தயவுசெய்து இந்த படத்தை ஒரு முறையாவது பார்த்து விட்டு, அதற்கு பிறகு தங்களுடைய ஜாதி படத்தை எப்படி எடுப்பது என்று தெரிந்து கொண்டால் மிகவும் நல்லது ..!
ஆக மொத்தத்தில் ARM படம் குடும்பத்துடன் காண வேண்டிய ஒரு நல்ல படம்.
