நிவின் பாலி மற்றும் நயன்தாரா முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே, அது ரசிகர்களிடையே வைரலாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பள்ளி வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த படம், மாணவர்களின் நிறைவான அனுபவங்களையும், பரபரப்பையும் வெளிப்படுத்துவதாக டீசர் சுட்டிக்காட்டுகிறது. காமெடி, அதிரடி, சஸ்பென்ஸ், உணர்ச்சி ஆகிய அனைத்தையும் கலந்து உருவாக்கப்பட்ட கமெர்ஷியல் என்டர்டெய்னர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து எழுதி இயக்கியுள்ளனர். தயாரிப்பு பொறுப்பை Maverik Movies Pvt. Ltd, Pauly Jr. Pictures (நிவின் பாலியின் சொந்த பேனர்) மற்றும் Rowdy Pictures Pvt. Ltd. இணைந்து மேற்கொண்டுள்ளன. இந்தப்படத்தில், நிவின் பாலி குறும்பான மாணவர் ‘ஹரி’ ஆக நடிக்கிறார். நயன்தாரா, வலிமையான போலீஸ் அதிகாரியாக வேடமளிப்பது கதைக்குச் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. 2019-ஆம் ஆண்டு வெளியான ‘லவ் ஆக்ஷன் டிராமா’க்குப் பிறகு, இந்த வெற்றி ஜோடி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத் திரையுலகில் இருந்து அஜு வர்கீஸ், ஷரஃபுதீன், சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆன்டனி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்துள்ளனர். பல நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.