வெவ்வேறு ஜானர்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்துள்ள வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட திரௌபதி 2 திரைப்படத்திற்கு மனதை ஊடுருவும் இசையை வழங்கியுள்ளார். ஜனவரி 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தில், ஜிப்ரானின் இசை கதையின் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தும் முக்கிய பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் குறித்து பேசிய ஜிப்ரான், இன்றைய காலத்தைத் தாண்டி கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப்பெரும் சவாலாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்றுத் திரைப்படம் அல்ல; மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கும் படைப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு தனது மனமார்ந்த நன்றியையும் ஜிப்ரான் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இசையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டது போலவே, இத்திரைப்படத்திலும் தீவிர ஆராய்ச்சியுடன் புதுமையான இசை வடிவத்தை கொண்டு வந்துள்ளதாக ஜிப்ரான் கூறினார். பிலிப் கே. சுந்தரின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு இணையாக பின்னணி இசையும் சிறப்பாக உருவெடுத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர், படம் வெளியாகும் நாளை திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், சண்டைப் பயிற்சி, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களிலும் படம் கவனம் ஈர்க்கும் வகையில் உருவாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.