தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘மை லார்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமாருடன் சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்கள் எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, எடிட்டிங் பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக டி.ஆர். பூர்ணிமா பணியாற்ற, நடன அமைப்பை எம். ஷெரீப் மேற்கொள்கிறார். சண்டை காட்சிகள் பி.சி. ஸ்டண்ட் அமைப்பில் உருவாகியுள்ளன. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தை அம்பேத்குமார் வழங்குகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளியாகியுள்ள டிரெய்லரில், சசிகுமார் பேசும் தாக்கமான வசனங்கள், விளிம்பு நிலை மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்த காட்சிகள், மேலும் சிறுநீரக திருட்டு தொடர்பான நிகழ்வுகள் போன்றவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அரசியல் ஆதிக்கத்தில் சிக்கிய எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக சொல்லும் வகையில் டிரெய்லர் அமைந்துள்ளதால், அனைத்து தரப்பினரிடமும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகனும், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் சசிகுமாரும் முதன்முறையாக இணைந்துள்ள இந்த ‘மை லார்ட்’ திரைப்படம் குறித்து டிரெய்லர் வெளியானதையடுத்து எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.