நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமாக உருவாகியுள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படம் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. டி தயாரித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, இது தனது 300-வது படம் என்றாலும் அந்த எண்ணிக்கையை சாதனையாக கருத விரும்பவில்லை என்று தெரிவித்தார். நாகேஷ், மனோரமா போன்ற ஜாம்பவான்கள் நடித்த படங்களின் எண்ணிக்கையை எட்டும் வரை தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் கூறினார்.

கதாநாயகிகள் குறித்து பேசும்போது, ஏற்கனவே நயன்தாராவுடன் நடித்துவிட்டதால் இனி எந்த கதாநாயகியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கவலையோ இல்லை என்றும், ஒரு படத்தில் முக்கியமானது கதைதான், கதாநாயகி அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

இசையமைப்பாளர் டி. இமானைப் பற்றி பேசிய அவர், தமக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இமான் என்றும், எதிர்காலத்தில் தாம் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கும் அவர் இசையமைக்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் தெரிவித்தார். நண்பர் காளி வெங்கட்டை பாராட்டிய யோகி பாபு, அவர் அழைத்தால் இரண்டு காட்சிகளுக்காக கூட நடிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

திரையுலகில் தனது ஆரம்பகால போராட்டங்களையும் யோகி பாபு நினைவுகூர்ந்தார். சென்னை வாசிகளுக்குக் கூட சினிமாவில் வாய்ப்பு பெறுவது எளிதல்ல என்றும், கடந்த 24 ஆண்டுகளாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கலை இயக்குநரின் உதவியாளர் உள்ளிட்ட பல வேலைகளை செய்து தான் இன்று இந்த நிலையை அடைந்துள்ளதாக பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் ராஜ்மோகனுடன் ஏற்பட்ட நட்பே இந்தப் படத்துக்கு காரணம் என்றும், நல்ல கதையுடன் வரும் புதிய இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு எப்போதும் வாய்ப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யோகி பாபு, இதுவரை கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். மேலும், தாம் 300 படங்களை எட்டியதற்கு முருகன் அருளே காரணம் என்றும், நகைச்சுவை நடிகராக கிடைக்கும் அன்பையும் ஆதரவையும் என்றும் மறக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

விழாவில் தயாரிப்பாளர் தங்கப்பாண்டி வரவேற்புரையாற்றினார். இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான், இசையமைப்பாளர் டி. இமான், ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா, நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டதுடன், யோகி பாபுவின் 300-வது படத்தை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.