
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy Ottran Dorai|2026-01-29
ஒரு போதை இரவும் பெண்ணின் கர்ப்பமும்! இளம் பெண்கள் பார்க்க வேண்டிய எச்சரிக்கை படம் – ‘லாக்டவுன்’ திரை விமர்சனம்
சென்னையில் தொழிற்பட்டறை நடத்தி வரும் லிவிங்ஸ்டன், மனைவி இந்துமதி மற்றும் மகளுடன் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்துகிறார். அதே நகரத்தில் சார்லி தனது மனைவி நிரோஷா மற்றும் மகள்கள் அனுப்பம்மா பரமேஸ்வரன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசிக்கிறார்.
கல்லூரிப் படிப்பை முடித்த அனுப்பம்மா பரமேஸ்வரன் வேலை தேடி அலைகிறார். வேலைக்கான அவசியத்தை தோழியிடம் பகிர்ந்துகொள்ளும் அனுப்பம்மா, அவள் அழைப்பில் ஒரு பார்ட்டிக்குச் செல்கிறார். மது பழக்கமே இல்லாத அனுப்பம்மா, தோழியின் வற்புறுத்தலால் மது அருந்தி, உச்சகட்ட போதையில் விழுந்துபோகிறார்.
அதன் இரண்டு மாதங்கள் கழித்து அனுப்பம்மாவின் வாழ்க்கையில் இடி விழுந்ததுபோல் ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறது. தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துகொள்ளும் அவள், காதலோ தவறான உறவோ எதுவும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்ற குழப்பத்தில் உடைந்து போகிறார். இதை குடும்பத்திடம் எப்படி சொல்வது என்ற பயம், மன உளைச்சல், வெறுப்பு என ஒருவித மனநிலையில் தள்ளாடுகிறார்.
நிலைமையை தோழியிடம் கூறி, கருவை கலைக்க முயற்சிக்கிறார். நான்கு மாதங்களுக்கு மேலாக பல மருத்துவர்களைச் சந்திக்கிறார். பண இழப்பு, ஏமாற்றம் என்று தொடர்ந்து தடைகள் வர, எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன.
இதற்கிடையில் அனுப்பம்மா மீது வீட்டில் சந்தேகம் எழ, குடும்பத்திலேயே மோதல் உருவாகிறது. அப்படிப்பட்ட சூழலில் கொரோனா பரவல் அதிகரிக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் அனுப்பம்மா எடுத்த முடிவு என்ன? அவள் சந்திக்கும் அவமானங்கள், பிரச்சனைகள் எத்தனை? அவளின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? அந்த உண்மை வெளிச்சத்திற்கு வருகிறதா என்பதே கதையின் மையம்.
இன்றைய சூழலில் பெண்கள் கவனமாக புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயத்தை இயக்குநர் AR ஜீவா மிகப் பக்குவமாக சொல்லியுள்ளார். சில காட்சிகளும் வசனங்களும் படத்தின் விறுவிறுப்பை சிறிதளவு குறைத்தாலும், கதையின் கருத்து பார்வையாளரை கட்டிப்போடுகிறது.
அனுப்பம்மா பரமேஸ்வரன் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஒரு காட்சியில் தன் நடன திறமையையும் வெளிப்படுத்துகிறார். தோழியாக வரும் நடிகையும் தன் பாத்திரத்தில் கலக்கிறார். லிவிங்ஸ்டன், சார்லி, நிரோஷா, ராஜ்குமார், இந்துமதி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் நடிப்புக்கு நியாயம் செய்துள்ளனர்.
NR ரகுநந்தன் – சித்தார்த் விபின் இசை படத்திற்கு அழகான பலம் சேர்க்கிறது. K.A. சக்திவேல் ஒளிப்பதிவு காட்சிகளை நேர்த்தியாகக் கொண்டு செல்கிறது. V.J. சாபு ஜோசப் எடிட்டிங் ரசிகர்களை கதையோடு இணைத்து பயணிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘லாக்டவுன்’ இளம் பெண்களும் பெற்றோர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு திரைப்படம்.
மதிப்பீடு: 3/5
