செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. SSR Entertainment சார்பில் K. I. சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தில் முகேன் ராவ் நாயகனாக நடித்துள்ளார். கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.

வெளியாகியுள்ள போஸ்டரில், அடர் நீல நிற லெதர் ஜாக்கெட்டில் கம்பீரமாக நிற்கும் முகேன் ராவுக்கு அருகில் தங்க நிறச் செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியை பின்னணியாகக் கொண்ட போஸ்டரில் இடம்பெற்றுள்ள “More Than a Pet, A Silent Witness” என்ற வாசகம் படத்தின் மர்மக் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையை, ‘மைலோ’ என்ற செல்ல நாயின் உதவியுடன் நாயகன் கண்டறிவதே படத்தின் மையக்கரு. மர்மத்துடன் கமர்ஷியல் அம்சங்களும் இணைந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.

முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்திரஜா ஆகியோர் நடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குத் திரும்பியுள்ள இந்திரஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு, திருவனந்தபுரம், மலேசியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்; ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்; வெங்கட் ராஜன் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். உமா சங்கர் – ஜெயமுருகன் கலை இயக்கத்தையும், கவின் மூர்த்தி – சந்திரன் வசனங்களையும் கையாண்டுள்ளனர். ஏ. ராஜா இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மணி சந்திரா, விஜி நடன அமைப்பையும், ஃபீனிக்ஸ் பிரபு, மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.

‘மைலோ’ படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.