நடிகர் சூர்யா அறிமுகப்படுத்திய ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமான மித்துன் மாணிக்கம், இயக்கி நடித்துள்ள ஃபேமிலி பாய் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

2020-ம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகியுள்ள இப்படம், குடும்ப டிராமா, ஆக்‌ஷன், திரில்லர் அம்சங்களுடன் தயாராகியுள்ளது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒருநாள் பயணத்தில் நடக்கும் சம்பவங்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் டீசர் காட்டுகிறது.

இப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை கார்த்திக் கே. கதிரவன் மேற்கொண்டுள்ளார். நிர்மல் ஜே.பி. இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு ஜிஜேந்திரன்.வி; கலை இயக்கம் சி.கே. முஜிபுர் ரஹ்மான்.

மெக்கானிக் பிக்சர்ஸ் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரிக்கும் இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்.எல்.பி. சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகமெங்கும் பலூன் பிக்சர்ஸ் இப்படத்தை வழங்குகிறது.

ஃபேமிலி பாய் திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டீசரின் பின்னணி இசையும் காட்சியமைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.