சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பிரத்யேக விளம்பர நிகழ்வு துபாயில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சூர்யா ஏற்றுள்ள டி.எஸ்.பி. இன்பராஜ் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஜித்து மாதவன், இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் மற்றும் ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஜோதிகா – சூர்யா தயாரிப்பில் 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை வினீத் அகஸ்டின் மேற்கொண்டுள்ளார்; சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி ‘சீன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம், கிரைம் த்ரில்லர், மர்டர் மிஸ்டரி அம்சங்களுடன் குடும்பங்கள் ரசிக்கும் பொழுதுபோக்குப் படமாகவும் இருக்கும் என்று சூர்யா தெரிவித்தார்.
நிகழ்வில் பேசிய இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன், சூர்யாவின் கனவை நனவாக்கும் முயற்சியாக ழகரம் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதாகவும், அந்த நிறுவனத்தின் முதல் படமாக ‘சீன்’ உருவாகியுள்ளதாகவும் கூறினார். புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவது ழகரம் ஸ்டுடியோஸின் நோக்கம் என்றும் தெரிவித்தார். ராஜசேகர் பாண்டியன், இது நிறுவனத்தின் அழகான தொடக்கம் என்றும், படத்தில் ரசிகர்கள் வித்தியாசமான சூர்யாவைப் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இயக்குநர் ஜித்து மாதவன், கதையைச் சொல்லத் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே சூர்யா சிரிக்கத் தொடங்கியதாகவும், அப்போதே கதை அவருக்குப் பிடித்துவிட்டதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். மொழிகளைக் கடந்து ரசிகர்கள் திரைப்படங்களை ரசிக்கும் சூழலில், ‘சீன்’ அனைவரையும் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நஸ்லெனுக்கு இது முதல் தமிழ்ப் படம். சிறுவயதிலிருந்தே ரசித்த சூர்யாவுடன் நடித்த முதல் நாள் மிகவும் பதற்றமாக இருந்ததாகவும், படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
துபாயில் பிறந்து வளர்ந்த நஸ்ரியா நஜீம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். படத்தில் ‘மாயா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், தன்னை நம்பி வாய்ப்பளித்த ஜித்து மாதவனுக்கு நன்றி கூறினார். ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து மகிழ்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இயக்குநர் ஜித்து மாதவனுடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை என்று கூறிய சூர்யா, இப்படம் தனது 28 ஆண்டுகால திரைப்பயணத்தில் புத்துணர்ச்சியான அனுபவமாக இருந்ததாகத் தெரிவித்தார். நஸ்ரியா, நஸ்லென், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் உள்ளிட்ட படக்குழுவினரையும் அவர் பாராட்டினார்.
2டி என்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்து ரசிகர்களுக்குப் பிடித்த தரமான பொழுதுபோக்குப் படங்களைத் தயாரிக்கும் என்றும், புதிய இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து அறிமுகப்படுத்த ழகரம் ஸ்டுடியோஸ் செயல்படும் என்றும் சூர்யா கூறினார். ரசிகர்கள் அளிக்கும் அன்பும் ஆதரவுமே தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடத் தூண்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


