‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம், வரும் ஜனவரி 14-ம் தே���ி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் வித்தியாசமான திரைமொழியால் கவனம் ஈர்த்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, ‘பாக்கெட் நாவல்’ படத்திலும் தனது பாணியைத் தொடர்ந்துள்ளார். அதேசமயம், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் சார்பில் தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஐந்து பாடல்கள், சுவாரஸ்யமான கதைக்களம், தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் என பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களது அனுபவங்களையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்கள் கதையுடன் எளிதில் ஒன்றிணைந்து ரசிக்கும் வகையில் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் தியாகராஜா குமாரராஜா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். வழக்கமாக தனது படங்களின் படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும் இயக்குநர், இப்படத்தின் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி குறுகிய காலத்திலேயே நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ராஜ் பி. ஷெட்டி, தனது கதாபாத்திரத்திற்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பது மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாகும். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, வித்தியாசமான கதை சொல்லல், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை மற்றும் பொங்கல் பண்டிகை வெளியீடு என பல அம்சங்களுடன் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள நிலையில், கதையையும் திரைக்கதையையும் ஆண்ட்ரூ லூயிஸ் எழுதியுள்ளார். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைக்க, ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். கலை இயக்குநராக வி. சண்முகராஜா பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளுக்கு திலீப் சுப்பராயன் வடிவமைப்பு செய்துள்ள நிலையில், ஆடை வடிவமைப்பை எஸ்.டி. எழில்மதி மேற்கொண்டுள்ளார். தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து டைலர் டர்டன், கினோ ஃபிஸ்ட் நிறுவனங்களின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

