‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் வரலாற்றுப் பின்னணியில் வித்தியாசமான கதைக்களத்தை திரையில் கொண்டு வந்த இயக்குநர் தரணி ராசேந்திரன், தற்போது இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக�� கொண்டு ‘டெத் ரெயில்வே’ என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். அதிகம் பேசப்படாத ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாகக் கொண்ட இப்படம் போர், மனிதர்களின் துயரம், காதல் மற்றும் வாழ்வியல் போராட்டங்களை இணைத்து உருவாகி வருகிறது.

1944-ம் ஆண்டில் ஜப்பானிய ராணுவம் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டமே இப்படத்தின் பின்னணியாக அமைந்துள்ளது. அப்போது ராணுவத்தின் போக்குவரத்து மற்றும் ஆயுத நகர்வுகளுக்காக ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கடுமையான கட்டுமானப் பணிகளில் தமிழர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பிடிபட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நோய்கள், உணவுப் பற்றாக்குறை, கடுமையான உழைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பணிகளில் ஈடுபட்ட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வரலாற்றுடன் தொடர்புடைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம் எனக் கூறப்படும் நிலையில், உண்மையான எண்ணிக்கை குறித்த தெளிவான கணக்குகள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை அப்படியே திரைப்படமாக பதிவு செய்வதை விட, அந்தக் காலகட்டத்தில் மக்களுக்கும் வீரர்களுக்கும் ஏற்பட்ட துயரங்களையும், அதன் பின்னணியில் நிகழ்ந்த சம்பவங்களையும் கதை வடிவில் சொல்ல இயக்குநர் தரணி ராசேந்திரன் முயற்சி செய்துள்ளார். போரின் தாக்கம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதுடன், உணர்வுப்பூர்வமான காதல் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.

சசிகுமார் இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி இந்திய வீரர்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து மோதும் சண்டைக் காட்சிகளும் படத்தில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கும் இப்படத்தை தரணி ராசேந்திரன் எழுதி இயக்குகிறார். சர்தக் கல்யாணி இசையமைக்க, ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைக்கிறார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

நாகலாந்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால், நாகலாந்து சூழலை உருவாக்கும் வகையில் நாகர்கோவிலில் செட் அமைத்து பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சுமார் 90 சதவீத படப்பிடிப்பு நேரடியாகவும், மீதமுள்ள பகுதிகள் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தின் மூலமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றின் மறைக்கப்பட்ட வலியை திரைப்பட மொழியில் சொல்லும் முயற்சியாக உருவாகி வரும் ‘டெத் ரெயில்வே’, போர் பின்னணி, ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையுடன் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.