விஜயதசமி நாளில், சென்னையில் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி கௌரவித்தார். குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் பெண்களின் பணியைப் பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ செல்வ லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனுமோல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தேர்வு செய்யப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியதுடன், அவர்களுடன் உரையாடி குடும்பச் சூழல் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அயலி இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் ரசிகர்களிடையே அறிமுகமான அனுமோல், ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கும்போது “Always Choose Kindness” என்று எழுதுவது வழக்கம். பெண்களின் உழைப்பையும் சுயசார்பையும் கௌரவிக்க வேண்டும் என்ற நோக்கில், அவரது ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உதவி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அனுமோல், குடும்பத்திற்காக எந்த நேரத்திலும் ஆட்டோ ஓட்டுவது எளிதான காரியம் அல்ல என்று கூறி, பெண்கள் தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் தனித்த அடையாளத்துடன் வாழ்வதற்காக மேற்கொள்ளும் உழைப்பைப் பாராட்டினார்.

பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரத்துடன் ஆரோக்கியம் மற்றும் கல்விக்கான வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். உருவம், நிறம் அல்லது மொழியின் அடிப்படையில் யாரேனும் சிறுமைப்படுத்தினாலும், உங்கள் இலக்கை நோக்கி மன உறுதியுடன் தொடர்ந்து பயணியுங்கள்,” என்று அனுமோல் பேசினார்.

பெண் ஓட்டுநர்களுக்கு இன்சுலேட்டட் தண்ணீர் பாட்டில்கள், தரமான நாப்கின்கள், பவர் பேங்க்கள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய பெண் ஆட்டோ ஓட்டுநர் பவானி, “எங்களின் தேவைகளை அறிந்து இந்தப் பொருட்களை வழங்கி, எங்களைக் கௌரவித்ததை மறக்க முடியாது. ஐ லவ் யூ மேடம்!” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.