அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழு புதிய மர்மம் நிறைந்த போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில், காவல்துறை அதிகாரி சீருடையில் அர்ஜுன் தாஸ் தோன்றும் வகையில் இந்தப் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் குற்ற விசாரணையை நினைவூட்டும் தடயங்கள் இடம்பெற்றுள்ளன. கதாபாத்திரங்களின் வித்தியாசமான முகபாவனைகளும், ஒன்றுக்கொன்று தொடர்புடையது போன்ற புகைப்படங்களும் படத்தின் கதைக்களத்தில் ஒளிந்திருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனத்தின் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா இப்படத்தை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்க, சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். ஆர்டிஸ்ட் 404 கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் வெங்கடரமணன் படத்தொகுப்பையும், அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.

ஜான் டோ என்பவர் யார்? அவர் பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா? என்ற மர்மமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. சந்துரு என்பவர் உண்மையைத் தேடிப் பயணிக்கும்போது, ஜான் டோ குறித்த உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றால் என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியையும் திரைக்கதை முன்வைக்கிறது. பார்வையாளர்கள் எளிதில் கணிக்க முடியாத வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருப்பதுடன், தனது திரைப்பயணத்தில் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாகவும் தோன்றுகிறார். புதிய போஸ்டரில் காவலர் சீருடையில் அவர் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பு, மதுமிதாவின் இயக்கம், அர்ஜுன் தாஸின் புதுமையான கதாபாத்திரம் எனப் பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.