‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜான் டோ’ (John Doe) திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், அனுபமா, அர்ச்சனா, குழந்தை நட்சத்திரம் நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர், நடிகர் அர்ஜுன் தாஸ், கதாநாயகிகள் மற்றும் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினர்.
இயக்குநர் மதுமிதா பேசுகையில், எந்த ஜானரில் திரைப்படம் உருவாக்கினாலும் மனித உணர்வுகள்தான் தனது படைப்புகளின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும், ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் என்றும் தெரிவித்தார். கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அர்ஜுன் தாஸ் கேரள காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா நடராஜன் தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளதாகவும் கூறினார். ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தமிழில் இப்படத்தைத் தயாரித்திருப்பது பெருமையான விஷயம் என்றும், தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி மற்றும் அவர்களது குழுவினர் ஒவ்வொரு கட்டத்திலும் மிகப்பெரிய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்ததாகவும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட சிவப்பு நிற டெடி பியருக்குப் பின்னால் ஒரு முக்கியமான கருத்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொருவருக்குள்ளும் சில குறைகள் இருந்தாலும் நாம் நம்முடைய இடத்தில் சிறந்தவர்கள்தான் என்பதையும், நம்மை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துவதற்காகவே அது வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஒரு இயக்குநருக்கான உண்மையான அங்கீகாரம் பார்வையாளர்களிடமிருந்துதான் கிடைக்கும் என்றும், நவம்பர் 13ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் பேசுகையில், இயக்குநர் மதுமிதா முதலில் இப்படத்தின் கதையைப் படித்துப் பார்க்கும்படி கூறியதாகவும், கதையைப் படித்த பிறகே நடிக்கச் சம்மதித்ததாகவும் தெரிவித்தார். அதன்பிறகு ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறினார். இப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் நீரவ் மிகவும் இயல்பாக நடித்துள்ளதாகவும், ஸ்ருஷ்டி தமிழில் பேசுவதற்காகக் கடினமாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு சிங்க் சவுண்ட் முறையிலும் சிறப்பாக வசனங்களைப் பேசியதாகவும் பாராட்டினார். சஞ்சனா நடராஜனின் நடிப்பையும் பாராட்டிய அவர், ஒளிப்பதிவாளர் பிரீதா ஜெயராமன், தயாரிப்பு வடிவமைப்பாளர் அஷ்வினி காலே, ஆடை வடிவமைப்பாளர்கள் பிரியா ஹரி, பிரியா கரண், படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பையும் குறிப்பிட்டார். இயக்குநர் மதுமிதாவுடன் இது தனது இரண்டாவது படம் என்றும், ஒரு பெண் இயக்குநராக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் திறமையாக வழிநடத்தும் அர்ப்பணிப்புமிக்க இயக்குநராக அவர் செயல்பட்டதாகவும் தெரிவித்தார். இப்படத்தில் தனது அம்மாவாக நடித்துள்ள நடிகை அர்ச்சனாவைத் தனது அதிர்ஷ்ட தேவதை என்று குறிப்பிட்ட அர்ஜுன் தாஸ், ‘கைதி’ படத்திற்காகத் தனக்குக் கிடைத்த முதல் விருது அர்ச்சனா தொகுத்து வழங்கிய ஜீ விருது நிகழ்ச்சியில்தான் கிடைத்தது என்றும், அதன்பிறகு அவர் தொகுத்து வழங்கும் விருது விழாக்களில் தனக்கு விருது கிடைப்பது வழக்கமாகிவிட்டது என்றும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். மேலும், தனது சகோதரி மாளவிகா இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளதாகவும், இயக்குநர் மதுமிதா நடத்திய ஆடிஷனில் அவர் தேர்வானது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். ‘ஜான் டோ’ வெறும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மட்டுமல்லாமல், வலுவான உணர்வுபூர்வமான அம்சங்களையும் கொண்டிருப்பதாகவும், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லர் அனுபவத்தை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகை சஞ்சனா நடராஜன் பேசுகையில், அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது என்றும், இப்படத்தில் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். அர்ஜுன் தாஸ் மிகவும் இனிமையாகவும் நட்பாகவும் பழகக்கூடியவர் என்றும், படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் கலகலப்பாக இருப்பார் என்றும் கூறினார். அவருடன் தீவிரமான காட்சிகளில் நடிக்கும்போதுகூட சில நேரங்களில் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். சுமார் 35 நாட்கள் இப்படத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றியதாகவும், தான் இதுவரை பணியாற்றிய படக்குழுக்களில் மிகவும் திட்டமிட்டும், நேரத்தை வீணாக்காமலும் பணியாற்றிய குழு இதுதான் என்றும் பாராட்டினார். குறிப்பாக, தொழில்நுட்பக் குழுவில் அதிகமான பெண்கள் இடம்பெற்றிருந்தது கூடுதல் மகிழ்ச்சியளித்ததாகக் கூறினார். ‘ஜான் டோ’ ஒரு சென்டிமென்ட் கலந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் என்றும், குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்துச் சென்று ரசிக்கக்கூடிய வகையில் இப்படம் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகை ஸ்ருஷ்டி பேசுகையில், தனக்குச் சிறிதளவே தமிழ் தெரியும் என்பதால் மேடையில் பேசுவதற்குப் பதற்றமாக இருப்பதாகத் தெரிவித்தார். சென்னையுடன் தனக்கு இருக்கும் நெருக்கமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், டெல்லியை விட்டு முதன்முதலில் வேறு நகரத்திற்குப் பயணம் செய்ததும் சென்னைதான் என்றும், முதன்முதலில் விமானத்தில் பயணம் செய்ததும், கடலைப் பார்த்ததும் சென்னையில்தான் என்றும் கூறினார். இப்போது தனது முதல் திரைப்படமும் தமிழ்ப் படமாக அமைந்திருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்குப் பின்னால் ஏதோ ஒரு பூர்வஜென்மத் தொடர்பு இருக்கலாம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இயக்குநர் மதுமிதா தனக்கு வழங்கிய தர்ஷனா கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், சக நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சஞ்சனா, ஜாரா, நீரவ், அனுபமா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் தனக்கு முழு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் பிரீதா ஜெயராமன் ஒளி மற்றும் லென்ஸ் குறித்த நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள உதவியதாகவும் நன்றி தெரிவித்தார்.
நடிகை அனுபமா பேசுகையில், ‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான மற்றும் ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம் என்றார். இப்படத்தைப் பார்ப்பதற்காகத் திரையரங்கிற்குள் செல்லும்போது ஒரு நபராகவும், படம் முடிந்து வெளியே வரும்போது மனதளவில் மாறுபட்ட நபராகவும் இருப்பீர்கள் என்று கூறிய அவர், அந்த அளவுக்கு இப்படம் பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகை அர்ச்சனா பேசுகையில், இப்படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்றும், திரையில் தோன்றும் முதல் ஒரு நிமிடத்திலேயே அந்தக் கதாபாத்திரத்தின் தாக்கத்தைப் பார்வையாளர்கள் உணர்வார்கள் என்றும் தெரிவித்தார். ஒரு சிறிய கதாபாத்திரத்தைக்கூட அழுத்தமானதாகவும், பார்வையாளர்களின் மனதில் நிற்கக்கூடியதாகவும் மாற்ற முடியும் என்பதை இயக்குநர் மதுமிதாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாகக் கூறினார். தன் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் பிரீதா ஜெயராமன் ISC பேசுகையில், இப்படத்தில் நீருக்கடியில் படமாக்கப்பட்ட காட்சிகள் முற்றிலும் புதிய அனுபவமாகவும், மிகப்பெரிய சவாலாகவும் இருந்ததாகத் தெரிவித்தார். கதையின் முக்கியமான பகுதி நீருக்கடியில் நடைபெறுவதால், முன்கூட்டியே காட்சிப் பிரிப்பு மற்றும் பிரீ-விஷுவலைசேஷன் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவர்களின் உதவியுடன் நீருக்கடியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், நடிகர்களுக்கும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பின் மூலம் இந்தச் சவாலான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ததாகக் கூறினார்.
படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் பேசுகையில், படத்தொகுப்பு என்பது ஒரு வகையில் கதையை மீண்டும் எழுதும் பணிதான் என்றார். இயக்குநர் எழுதிய கதையைப் படத்தொகுப்பு மேசைக்கு வந்த பிறகு, காட்சிகளின் வரிசை மற்றும் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் மேலும் சிறப்பாக உருவாக்க முடியும் என்று விளக்கினார். இயக்குநர் மதுமிதாவுடன் இணைந்து பணியாற்றி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால், அவர் எந்த நோக்கத்திற்காக ஒரு காட்சியைப் படமாக்குகிறார் என்பதை முன்கூட்டியே தன்னால் புரிந்துகொள்ள முடியும் என்றார். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே படத்தொகுப்புப் பணிகளைத் தொடங்கி, தொகுக்கப்பட்ட காட்சிகளை இயக்குநருக்கு அனுப்பி வைப்பதாகவும், இதனால் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே படம் எவ்வாறு உருவாகிறது என்பதை இயக்குநரால் பார்க்க முடியும் என்றும் தெரிவித்தார். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருப்பதாகக் கூறினார்.
தயாரிப்பாளர் பிரசாத் தேவினேனி பேசுகையில், இயக்குநர் மதுமிதாவிடமிருந்து சிறந்த கதைக்களம் கிடைத்ததாகவும், அவர் மிகுந்த அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றியிருப்பதாகவும் பாராட்டினார். இரண்டு நாட்களுக்கு முன்பு படக்குழுவினருடன் இணைந்து படத்தைப் பார்த்ததாகவும், தங்களது நிறுவனத்தின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதில் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார். இது முதல் படமாக மட்டுமல்லாமல், தொடர்ந்து பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான தொடக்கமாகவும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இப்படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸைத் தவிர வேறு யாரையும் தன்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றும் பாராட்டினார். ஆரம்பத்தில் இப்படத்தைத் தெலுங்கில் தயாரிப்பது குறித்தும் ஆலோசித்ததாகவும், ஆனால் கதைக்குத் தேவையான உள்ளூர் கலாச்சாரப் பின்னணியும் இயல்புத்தன்மையும் தமிழில் படமாக்கும்போதுதான் சிறப்பாக வெளிப்படும் என்பதால் தமிழில் தயாரிக்க முடிவு செய்ததாகவும் விளக்கினார். படத்தின் விநியோகத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் இணைந்திருப்பது நம்பிக்கையளிப்பதாகவும், நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், டிவோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அர்கா மீடியாவொர்க்ஸ் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து கதையையும் திரைக்கதையையும் எழுதியுள்ளனர். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்க, சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், அனுபமா, அர்ச்சனா, நீரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்ய, முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். ஆர்டிஸ்ட் 404 கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. விஜய் வெங்கடரமணன் படத்தொகுப்பையும், அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.
அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, கேரளா – தமிழ்நாடு எல்லைப் பின்னணியில் அமைந்துள்ள மர்மமான கதைக்களம், நீருக்கடியில் படமாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு எனப் பல்வேறு அம்சங்கள் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


