ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஷாருக்கான் நடிக்கும் கிங் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உதடுகளுக்கு இடையே ரோஜாப்பூ, கண்களில் தீவிரம், கைகளில் துப்பாக்கி என ஆக்‌ஷன், தீவிரம், சிறிதளவு காதல் ஆகிய அம்சங்கள் கலந்த தோற்றத்தில் ஷாருக்கான் போஸ்டரில் இடம்பெற்றுள்ளார். “கொலையாளி அல்ல; நான் காதலன்!” என்ற வாசகமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஷாருக்கானின் அதிரடியான அவதாரத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் படத்தில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெறுகிறார்.

சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் மற்றும் சச்சின்–ஜிகர் இணைந்து இசையமைக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கௌரி கான், சித்தார்த் ஆனந்த், மம்தா ஆனந்த் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதான் படத்துக்குப் பிறகு ஷாருக்கான்–சித்தார்த் ஆனந்த் மீண்டும் இணைவதும், சுஹானா கான் முழுநீளத் திரைப்படத்தில் அறிமுகமாவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.