பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு கமல் ஸ்ரீதேவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘வித் லவ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு Zion Films மற்றும் MRP Entertainment மீண்டும் இணைந்துள்ளன. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக கமல் ஸ்ரீதேவி உருவாகி வருகிறது. கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
மூணாறு மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். அனுவர்தன், நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
கேமரா செந்தில் விளம்பரப் புகைப்படங்களையும், மணியன் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களையும் கவனிக்கின்றனர். ஆர்.ஜே. சுரேஷ் குமார் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார். கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பையும், சுரேன் ஜி, அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ்.இ இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். பிரசாந்த் எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும், சரத் ஜே. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகவும் உள்ளனர்.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த MRP Entertainment, தனது அடுத்த படைப்பாக கமல் ஸ்ரீதேவியை உருவாக்குகிறது. தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


