‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்கள் மூலம் கவனம் பெற்ற நடிகை ருக்மிணி வசந்த், ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீ கார்த்திக் இணையும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்தில் ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோர் தாரா கதாபாத்திரத்துக்கான தேர்வில் ஈடுபடுகின்றனர். அப்போது எதிர்பாராத அறிவிப்பு ஒன்று அவர்களைத் திகைக்க வைக்கிறது. இறுதியில் ருக்மிணி வசந்த் அறிமுகமாகி, படத்தின் உலகம் குறித்த முதல் பார்வையை வழங்குகிறார்.
காலப்பயணக் கருவுடன் தாய்–மகன் உறவின் உணர்வுப்பூர்வமான கதையையும் இணைத்த ‘கணம்’ படத்துக்குப் பிறகு, ஸ்ரீ கார்த்திக் புதிய கதைக்களத்துடன் இந்தப் படத்தை உருவாக்குகிறார்.
மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார். தேவ் ராம்நாத், ஸ்ரீ கார்த்திக் ஆகியோரால் தொடங்கப்பட்ட மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட், ‘ஐ ஹேட் யூ – ஐ லவ் யூ’ என்ற தமிழ் இணையத் தொடர் மற்றும் விருது பெற்ற ‘சைல்ட்ஹுட் டைரீஸ்’ குறும்படம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.
தயாரிப்பாளர் ஜஸ்வந்துடன் தொடர்புடைய சிருனி சினி கார்ப்பரேஷன், ராகுல் ரவீந்திரன் இயக்கிய ‘சி லா சோ’ படத்தைத் தயாரித்தது. அந்தப் படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. ‘கீதா கோலா’, ‘காந்தா’ படங்களுடன் தொடர்புடைய சாய் கிருஷ்ணா கட்வாலும் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 18 மாதங்களில் படக்குழு சந்தித்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் இன்ஸ்டாகிராமுக்காக கற்பனை கலந்த ஆவணத் தொடர் ஒன்றையும் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஒன்பது அத்தியாயங்களைக் கடந்துள்ள அந்தத் தொடர், நிஜ அனுபவங்களையும் நாடக வடிவிலான காட்சிகளையும் இணைத்து, ருக்மிணி வசந்த் ‘தாரா’வாக நடிப்பதை அறிவித்துள்ளது.
படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


