ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்முறையாக கதாநாயகனாக களமிறங்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினரும் திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்ட நிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

Sivan Pictures மற்றும் S Studios சார்பில் பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.எம்.ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ள இந்த தொடரை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். “விலங்கு” சீரிஸின் வெற்றிக்குப் பிறகு உருவாகும் இந்த புதிய முயற்சியின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் இணைந்து எழுதியுள்ளனர்.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பிரசாந்த் பாண்டியராஜ், “விலங்கு சீரிஸுக்கு மக்கள் தந்த ஆதரவே எங்களுக்கு அடையாளம் தந்தது. அதே நம்பிக்கையுடன் இப்போது நடிகராக உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த ‘வாரண்ட்’ தொடருக்கும் அதே அன்பை வழங்குவீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் நடராஜன், “இந்த சீரிஸின் கதையை நானும் பிரசாந்தும் இணைந்து உருவாக்கினோம். அவரை நடிகராக மாற்றியதில் மகிழ்ச்சி. இது என் முதல் இயக்க முயற்சி என்பதால் ரசிகர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்” என தெரிவித்தார்.

ZEE5 சீரிஸ் பிரிவு தலைவர் ஷாம் பேசுகையில், “‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறான் என்பதை ரியலிஸ்டிக்காக சொல்லும் கதை இது” என்றார்.

விழாவில் கலந்து கொண்ட இயக்குநர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன், ராம்குமார், தமிழரசன் பச்சைமுத்து உள்ளிட்டோர், பிரசாந்த் பாண்டியராஜின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர் கவின், “டிரெய்லரை பார்த்தவுடன் இது வெப் சீரிஸ் அல்ல, ஒரு பெரிய திரைப்படம் போல இருந்தது” என்று கூறினார்.

“வாரண்ட்” தொடரின் கதை, கிராமப்புற காவல் நிலையங்களின் பின்னணியில் நகர்கிறது. “கோட்டை கருப்பசாமி” என்ற காவலரை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த தொடர், அதிகாரத்தின் இருண்ட முகம், மனித மன அழுத்தம், போலீஸ் வாழ்க்கையின் உளவியல் மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்கிறது. பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, ஒரு சாதாரண காவலரின் மனநிலை எவ்வாறு மாறுகிறது என்பதே கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஒரு லாக்கப் டெத் சம்பவத்திற்குப் பிறகு உண்மை, அதிகாரம், நீதி ஆகியவற்றுக்கிடையில் வெடிக்கும் மோதல்கள் கதையை பரபரப்பாக முன்னெடுக்கின்றன. போலீஸ் வாழ்க்கையின் நிஜமான முகத்தை காட்டும் முயற்சியாக இந்த தொடர் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தொடரில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா எம்.வி., அருள்ஜோதி, சாயாதேவி, மீனா, கௌசல்யா, வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த தொடருக்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங்கை ஆர்.ராமர் கவனித்துள்ளார்.

“விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை ரசித்த ரசிகர்களுக்கு, “வாரண்ட்” மேலும் தீவிரமான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் வரும் மே 22ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.