வரும் மே 23ஆம் தேதி பெரிய விஷயம் ஒன்றை சொல்லப்போவதாக நடிகர் ரவிமோகன் அறிவித்திருக்கிறார். ரவிமோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சமரச பேச்சு வார்த்தைகள் தொடர்பான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து ஆர்த்தி தாக்கல் செய்த மனுவில் ரவி மோகன் மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும்; குழந்தைகளையும் ரவியே பாராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல ரவி மோகன் தரப்பில் இருந்து ஆர்த்தி சேர்ந்து வாழ வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டும் மனுக்களுக்கும் ரவிமோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரவிமோகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில் வரும் மே 23ஆம் தேதி ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லப்போவதாகவும், அதற்காக காத்திருக்கும்படியும் குறிப்பிட்டிருக்கிறார். வர இருக்கும் அறிவிப்பு கிரிக்கெட் பற்றிய அறிவிப்பாகவும் இருக்கலாம். அப்போது புளூ டிசார்ட் ஒன்று அணிந்துகொண்டு, ஒரு பந்தினை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார். ஸ்ட்ரீட்ஸ் வில் ரிமெம்பர் என்னும் பக்கத்தையும் டேக் செய்திருக்கிறார். இந்தப்பதிவிற்கு அவரது ரசிகர்கள் நல்ல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பலர் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி ஆர்த்தி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆர்த்தியையும் ரவி மோகனையும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இருவரும் மத்தியஸ்தர் முன்னிலையில் மூன்று முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி என இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்கள். அப்போது ஆர்த்தி தரப்பில் மாதந்தோறும் ரூ. 40 லட்சம் ஜீவானம்சமாக கேட்கப்பட்டது. குழந்தைகளையும் ரவி மோகனே பாராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் ஆர்த்தி கூறியதாவது, ' ஒரு முறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான். "உங்கள் வாழ்வின் ஒளி" என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. எனக்குக் 'கட்டுப்படுத்திய மனைவி' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. என் கணவரை அன்புடன் பராமரித்து, அவருக்குக் கேடு தரும் தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களிலிருந்தும் அவரைப் பாதுகாத்துக் கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால், நாங்கள் பிரிவதற்கு முதல் நாள் வரை எங்கள் உறவும் எல்லோருடைய திருமண வாழ்விலும் இருப்பது போல அன்பும், விவாதமும், ஆசையும், தற்காலிக கருத்து வேறுபாடுகளும் நிறைந்தது என்று தான் நான் நம்ப வைக்கப்பட்டேன். உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி "தொலைத்த பெற்றோர்கள்" என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம்" என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.