ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படம், நவீன சினிமா தொழில்நுட்பத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் மோஷன் கேப்சர் செய்ததற்காக இப்படத்திற்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

‘ராக்கா’ திரைப்படத்திற்கான இந்த சாதனை முயற்சி கடந்த பிப்ரவரி 2026-ல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை மொத்தம் 37 கலைஞர்கள் ஒரே அமர்வில், ஒரே நேரத்தில் நிகழ்நேர மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 15 செப்டம்பர் 2026 அன்று வழங்கப்பட்டது.

இதையடுத்து கின்னஸ் உலக சாதனையின் மூத்த நடுவர் ஸ்வப்னில் டாங்ரிகர், அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனை சான்றிதழை அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரிடம் வழங்கினார். படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த சாதனை குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தி உலக அளவில் புதிய அளவுகோலை உருவாக்கும் இந்த சாதனை தங்களுக்கு மிகவும் பெருமையான தருணம் என தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் அட்லீயின் பார்வை மற்றும் வழிகாட்டுதல், ஒட்டுமொத்த படக்குழுவினரின் கடின உழைப்பு ஆகியவற்றால்தான் இந்த சாதனை சாத்தியமானதாகவும், இத்தகைய பிரம்மாண்டமான படைப்பை உருவாக்க தொடர்ந்து ஆதரவளித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லீ கூறுகையில், சிறுவயதில் கின்னஸ் உலக சாதனைகள் குறித்து ஆச்சரியத்துடன் கேள்விப்பட்டதாகவும், ஒருநாள் தாமும் ஒரு சாதனை படைப்போம் என்று அப்போது நினைத்துப் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரே படப்பிடிப்பில் 37 மோஷன் கேப்சர் கருவிகளை ஒருங்கிணைத்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது கனவு போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், பெரிய pகனவுடன் முழுமையான நம்பிக்கையோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் சாத்தியமற்றதாகத் தோன்றும் விஷயங்களையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘ராக்கா’ படத்தின் மோஷன் கேப்சர் பணியில் 37 பேரின் தனித்தனி நடிப்பையும் ஒரே Capture Volume-க்குள் ஒரே நேரத்தில் துல்லியமாகப் பதிவு செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. ஒவ்வொரு கலைஞரின் தனித்துவமான நடிப்பும் பாதிக்கப்படாமல் பதிவு செய்யப்பட வேண்டியிருந்ததால், இதற்கென பிரத்யேக தொழில்நுட்பத் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.

படத்தின் VFX தயாரிப்பாளர், ‘ராக்கா’ திரைப்படத்தின் பிரம்மாண்டத்திற்கும் தொழில்நுட்பத் தேவைகளுக்கும் ஏற்ற வகையில் புதிய மோஷன் கேப்சர் பைப்லைன் மற்றும் வர்க் ஃப்ளோவை உருவாக்கியுள்ளார். இந்த கின்னஸ் சாதனை முயற்சிக்காக 92 ஆப்டிகல் மோஷன் கேப்சர் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கேப்சர், கேளிபரேஷன், நெட்வொர்க்கிங், சிங்க்ரோனைசேஷன், ரியல்-டைம் அன்றியல் விசுவலைசேஷன், விட்னஸ் கேமரா மற்றும் பேசியல் கேப்ச்சர் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பு, அட்லீயின் இயக்குநர் பார்வை, அல்லு அர்ஜுனின் அர்ப்பணிப்பு, Apple Art Studio-வின் தொழில்நுட்பத் திறன், படத்தின் மேம்பட்ட VFX தொழில்நுட்பம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் கூட்டு முயற்சி ஆகியவை இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளன.

கின்னஸ் உலக சாதனை மூலம் ‘ராக்கா’ திரைப்படம் இந்திய சினிமாவின் நவீன தொழில்நுட்பத் திறன் மற்றும் பிரம்மாண்டமான படைப்பாற்றலை சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் படைப்பாக கவனம் பெற்றுள்ளது. இந்திய படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையுடன் உருவாகி வரும் இந்த திரைப்படம், நவீன திரைப்படத் தொழில்நுட்பத்தில் இந்திய சினிமா எட்டியுள்ள புதிய சாத்தியங்களையும் வெளிப்படுத்துகிறது.