
tamil news ➔ kollywood newsBy sivan|2025-05-19
ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியாது: இயக்குனர் வெற்றிமாறன்!
இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்து வாடிவாசல் எனும் படத்தை இயக்குவதாக அறிவித்தார்.
இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது. பின், படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்றும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் வெவ்வேறான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இயக்குநர் வெற்றி மாறனின் வாடிவாசல் படம் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவித்தார். அப்போது படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் வெற்றிமாறனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் ரசிகர்களுக்கு நல்ல சேதி சொல்வோம் என்றும் கூறினார்.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் வெற்றி மாறன், தன் வாடிவாசல் படம் குறித்து பேசினார். அப்போது, தொகுப்பாளர் வாடிவாசல் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறதே அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி செய்யப்படுமா..? எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு படத்திலிருந்து இன்னொரு படம் தான் எடுக்கிறேன். நான் ரசிகர்களின் எந்த எதிர்பார்ப்புக்கும் பொறுப்பாக முடியாது. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவிற்கான எந்த ஸ்டேண்டட்களையும் எல்லாம் சரியாக செய்ய முடியுமா என தெரியவில்லை.
ஒருவேளை இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்தது என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான். ஆனால், என்னால் எந்த பொறுப்புகளையும் ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த திரைப்படம் சி. சு. செல்லப்பாவின் "வாடிவாசல்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கு மத்தியில் இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தயாரிப்பாளரும், இந்தப் படத்தின் இசை மாஸ்டர் பீஸாக இருக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
