96 படத்தை இயக்கிய ப்ரேம் குமார் இயக்கத்தில், அர்விந்த் சாமி, கார்த்தி நடிப்பில், சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மெய்யழகன்.
சொந்தங்களால் சொத்தை இழந்து, இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் செல்கிறது அர்விந்த்சாமியின் குடும்பம். சுமார் 22 ஆண்டுகள் கழித்து , சொந்த ஊரில் நடக்கும் தன் சித்தி மகள் திருமணத்தில் பங்கேற்க, மீண்டும் தஞ்சாவூர் வருகிறார் அரவிந்த்சாமி. அங்கு அவரை உபசரிக்க வரும் உறவுக்காரர் கார்த்தியுடன், அர்விந்த்சாமி பழக நேர்கிறது.
கார்த்தியின் அதிக பிரசங்கித் தனத்தை சகிக்க முடியாத அரவிந்த்சாமி கார்த்தியின் பெயர் கூட தெரியாமல், அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் வேண்டா வெறுப்புடனே பழகி வருகிறார். ஆனால் கார்த்தியோ, அவரை தன் வீட்டு தெய்வம் போல் பாவித்து பழகுகிறார். அதை ஒரு கட்டத்தில் உணரும் அரவிந்த்சாமி,இறுதியில் தன்னை தெய்வமாக பாவிக்கும் கார்த்தியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறோமே என்கிற குற்ற உணர்வில், அந்த இரவு முடிந்து விடியும் போது, சென்னை வந்துவிடுகிறார். அதன் பின் கார்த்தியின் பெயர் என்ன என்பதை கண்டறிந்தாரா என்பதே படத்தின் மொத்த கதை.
படத்தில் பல காட்சிகள் மிகவும் இயற்கையாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தன. அதிலும் குறிப்பாக அரவிந்த்சாமி அறிமுகம் ஆகும் போது, பச்சைக்கிளிகளுக்கு உணவு வைக்கும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டியை காட்டிய விதமும் மிக அருமையாக இருந்தது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகில் ரயில் செல்லும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும்.
படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படத்திற்கு ஏற்ற இசையை கொடுத்திருக்கிறார்.
ஆனால் படத்தில் பெரிய குறைகளும் உள்ளன.
படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை பார்க்கும் போது செலவே இல்லை; ஆனால், பக்கம் பக்கமாக வசனம் எழுதுவதற்காக வாங்கிய காகிதங்களுக்கு பெரிய அளவில் செலவாகியிருக்கும்.
உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான்.. ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி? அர்விந்த்சாமிக்கு தேவதர்ஷினி ஜோடியா என்கிற முதல் குறை, அர்விந்த்சாமியின் அப்பா ஜெயபிரகாஷ் என்கிற இரண்டாவது குறை, தங்கை பாசத்திற்காக வந்தவர், அந்த தங்கையின் திருமணத்தை கூட பார்க்காமல் விறுட்டுன்னு வீட்டுக்கு கிளம்புவது மூன்றாவது குறை, இப்படி பல குறைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
டெல்டா இளைஞராக கார்த்தி அப்படியே கச்சிதமாக இருக்கிறார். உடை, நடை, சிகை என எல்லாமே அவருக்கு சிறப்பா இருந்தது. ஆனால் சில இடங்களில் பருத்திவீரன் கார்த்தியும், கொம்பன் கார்த்தியும் வந்து விடுகிறார்கள். அதே போல அர்விந்த் சாமியின் நடிப்பும் அருமை.
ஆனால், அதையே 3 மணி நேரம் பார்ப்பது என்றால்? அங்கு தான் பிரச்னை! சொல்ல வந்ததை சொல்லாமல், சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு வீட்டில் பெரியார் போட்டோ, முருகன் போட்டோ என தலைக்கும் காலுக்கும் சம்மந்தமே இல்லாத பல காட்சிகள்!
திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை என சம்மந்தமே இல்லாத ஜானரில் எல்லாம் படம் படம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நம் கவனத்தை வேறு எங்கோ கொண்டு செல்கிறது. நீடாமங்கலம் பகுதியில் நடந்த சம்பவங்களைப் பற்றி கூறியிருந்தாலே போதும், அதை விடுத்து இவையெல்லாம் வலு கட்டாயமாக திணிக்கப்பட்டவைகள்.
சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இடங்களில் வருகிறது. ஆனால், அதை அடைய பல இடங்களை கடக்க வேண்டியிருக்கிறது. அப்படியே 96 படத்தின் டெம்ப்ளேட்டை எடுத்து, இந்த படத்திலும் அதையே செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், காதல் எடுபட்ட அளவிற்கு, சிறுவயது பாசம் எடுபடவில்லை.
மேலும் இந்தப் படத்தில் பல பெரிய நடிகர்கள் ஜூனியர் ஆர்டிஸ்ட்களாக காட்டப்பட்டது மிகப்பெரும் வேதனை. ராஜ்கிரண்( மொத்தம் நான்கு காட்சிகள் ), ஒரு முறை பலகாரம் எடுத்து வர பயன்படுத்தப்பட்ட இளவரசு, அழுவதற்காகவே ஒரு மேடையில் பயன்படுத்தப்பட்ட அழகான தங்கை, இடைவேளைக்குப் பின் இதமாக இரு காட்சிகளில் வரும் ஸ்ரீதிவ்யா, ஒரே ஒரு முறை பட்டு வேட்டியுடன் பட்டும் படாமல் வந்து போகும் துரோக உறவினர்கள், இவர்களுக்கு எல்லாம் காட்சி எங்கே? கேமரா முழுக்க அர்விந்த் சாமியும்- கார்த்தியுமாக நிரப்பிவிட்டார்கள். அதுவே படத்தின் ப்ளஸ் ஆகவும், பல இடங்களில் மைனஸாகவும் மாறிவிட்டது.
படத்தின் கதையை இயக்குனரிடம் இருந்து பிடுங்கி, எடிட்டர் 2 மணி நேரத்திற்குள்ளாக சொல்லியிருந்தால், இன்னும் கூட ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், வம்பாக 3 மணி நேரத்திற்கு கதையை நகர்த்தி, அதுவும் இருவரை மட்டுமே காட்சிகளாக வைத்து நகர்த்தி, இயக்குனர் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். எங்களைப் பொறுத்த வரைக்கும் மெய்யாலுமே மெய்யழகன் கொஞ்சம் தடுமாறுவான் தான்!

