மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் ஊக்கமூட்டும் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் படக்குழு தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம் சரண், சிவராஜ்குமார், ஏ.ஆர். ரஹ்மான், திவ்யேந்து சர்மா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் இயக்குநர் புச்சி பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பேசும்போது, “சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் என் திரைப்பயணத்தில் முக்கியமானவை. அதுபோலவே ‘பெத்தி’யும் என் மனதிற்கு நெருக்கமான படம். ஒரு திரைப்படத்திற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் நடிகர்களின் அர்ப்பணிப்புதான். அந்த மூன்றும் இந்தப் படத்தில் அசாதாரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ராம் சரண் இந்தக் கதாபாத்திரத்திற்காக உடல் மற்றும் மன ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்றுள்ளார். இது அவரின் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்,” என்றார்.

நடிகர் திவ்யேந்து சர்மா, “என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து புதிய முயற்சியை செய்ய வாய்ப்பு கொடுத்த படம் ‘பெத்தி’. ராம் சரண் முதல் நாளிலிருந்தே என்னை மிகவும் அன்பாக அணுகினார். ரத்னவேலு சார் கொடுத்த சுதந்திரமும் நம்பிக்கையும் மறக்க முடியாதது,” என தெரிவித்தார்.

இயக்குநர் புச்சி பாபு பேசும்போது, “சென்னை என்பது சினிமா வாழும் நகரம். நான் மதிக்கும் பல கலைஞர்கள் இங்கிருக்கிறார்கள். ‘பெத்தி’ மிகவும் உணர்ச்சிப்பூர்வமான படம். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பை ரசிகர்கள் மறக்க முடியாது. ஏற்கனவே சிறப்புக் காட்சிகளை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்,” என்றார்.

நடிகர் சிவராஜ்குமார், “இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். அதே நேரத்தில் புற்றுநோய் சிகிச்சை காரணமாக படம் செய்ய முடியுமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் படக்குழு எனக்காக காத்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. ராம் சரண் இந்தக் கதாபாத்திரத்திற்காக எடுத்த உழைப்பு அபாரமானது,” என கூறினார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசும்போது, “சிரஞ்சீவி போன்ற பெரிய ஆலமரத்தின் மகனாக இருந்தாலும், ராம் சரண் இன்று தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் ஒவ்வொரு ஃபிரேமிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். இன்று காலைதான் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். அதற்குப் பிறகும் இன்னும் சிறப்பாக செய்யலாமா என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது,” என்றார்.

ராம் சரண் தனது உரையில், “சென்னை எனக்கு எப்போதும் ஒரு உணர்வுபூர்வமான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. ‘பெத்தி’ படத்திற்காக நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக உழைத்திருக்கிறோம். ஆனால் எங்களை விட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. இந்தப் படத்தை நான் வெறும் நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய உணர்ச்சிப்பூர்வமான படம் இது,” என தெரிவித்தார்.

மேலும், தமிழக முதல்வர் விஜய்க்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்த ராம் சரண், “திரைப்பட உச்சத்தில் இருந்த ஒருவர் பொதுச் சேவைக்காக அரசியலுக்கு வந்திருப்பது பெருமைக்குரியது,” என்றார்.

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.