புராணம், மர்மம், சாகசம் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப காட்சிகளின் சங்கமமாக உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படமான ‘நாகபந்தம்’ ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் விராட் கர்ணா நடித்துள்ளதுடன், நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், சரண்யா, ஜான் கொக்கேன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைப்புலி எஸ். தாணு, நாகத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனித்துவமான வரவேற்பு இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். 'நாகபந்தம்' திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் தயாரிப்பு தரம் மிகுந்த பிரம்மாண்டமாக இருப்பதாகவும், இப்படம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் பேசுகையில், டிஜிட்டல் காலத்திலும் சில திரைப்படங்கள் மட்டுமே திரையரங்கில் கண்டுகளிக்க வேண்டிய அனுபவத்தை வழங்குகின்றன என்றும், அந்த வரிசையில் 'நாகபந்தம்' முக்கிய இடம் பெறும் என்றும் கூறினார். படத்தின் தலைப்பே மர்மத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் அஜய் ரத்னம், இயக்குநர் அபிஷேக் நாமாவின் நீண்டகால சினிமா அனுபவம் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிப்பதாக பாராட்டினார். கதாநாயகன் விராட் கர்ணாவின் அர்ப்பணிப்பு மற்றும் படக்குழுவின் உழைப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நடிகர் ஜான் கொக்கேன், புராணக் கதையை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தும் பிரம்மாண்ட திரைப்படமாக 'நாகபந்தம்' உருவாகியுள்ளதாக தெரிவித்தார். இப்படம் பெரிய திரையில் மட்டுமே முழுமையான அனுபவத்தை வழங்கும் என்றும் ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

நாயகி நபா நடேஷ் பேசுகையில், வரலாறு, மர்மம், ஆக்சன், உணர்வுகள் என அனைத்து அம்சங்களும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக 'நாகபந்தம்' உருவாகியுள்ளதாக கூறினார். டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கதாநாயகன் விராட் கர்ணா, 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாக தெரிவித்தார். இந்திய பாரம்பரியம், கோவில் மரபுகள் மற்றும் ஆன்மிக பின்னணியை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இப்படம் இருக்கும் என்றும், ரசிகர்கள் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சௌந்தர் ராஜன் எஸ். ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபே இசையமைத்துள்ளார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பை கவனித்துள்ளார். கலை இயக்குநர் அசோக் குமார் பிரம்மாண்டமான செட்களை வடிவமைத்துள்ளதுடன், தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள 'நாகபந்தம்' தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.