கர்நாடக மாநிலம் சோலாப்பூரில் வசித்து வருபவர் 37 வயதான பஞ்சாப் ஷரி சாமி . இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்து அத்துடன் அவரிடமிருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி பொருட்கள், தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி மற்றும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் 2003ம் ஆண்டிலிருந்து பல்வேறு வீடுகளில் நகை மற்றும் பணங்களை திருடி ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஒரு நடிகைக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் நடிகைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். 2016ம் ஆண்டு கோல்கட்டாவை சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு ரூ3 கோடியில் சொகுசு வீட்டை கட்டிக் கொடுத்துள்ளார். அத்துடன் காதலியின் பிறந்தநாளுக்கு ரூ.22 லட்சம் மதிப்புள்ள பரிசையும் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் 2016ல் இவரை காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின், 6 ஆண்டுகள் கழித்து வெளியே வந்த இவர் மீண்டும் திருட ஆரம்பித்தார்.
அந்த வகையில் மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இவர் மீது 180 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தான் திருடும் நகைகளை உருக்கி, விற்பனை செய்து வந்துள்ளார். ஒரு வீட்டிற்குள் சென்று திருடிவிட்டு, பின்னர் வெளியே வந்ததும் தனது உடையை மாற்றிக் கொண்டு தப்பிவிடுவார். இவர் கராத்தேயில் கருப்பு பெல்ட்டும் வாங்கியவராம். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அவரது காதலியிடமும் விசாரணை நடத்த இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அவரிடம் மீதம் உள்ள பணம், நகைகளையும் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

