தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள ஒரு கிராமம்… அந்த ஊரின் தலைவராக இருப்பவர் கஜ ராஜா. அந்த கிராமத்தில் இருக்கும் பழமையான ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடியேறுகிறார் ஆனந்து நாக். புதிதாக வீட்டுக்குள் குடும்பம் குடியேறிய சில தினங்களிலேயே, அதே கிராமத்தில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடக்கிறது. ஒரு பாட்டியும் ஒரு குழந்தையும் இரவில் வெளியே சென்றபோது, அந்தக் குழந்தை கொடூரமாக கொல்லப்படுகிறது. குழந்தையின் பாட்டி சுயநினைவிழந்து கிடக்கிறார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணையை தொடங்குகிறார்கள். விசாரணையில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகத் தொடங்க, குழந்தை கொலையின் பின்னணி தீவிரமாகிறது. வழக்கின் விசாரணைக்காக ஆனந்து நாக் வீட்டுக்கு துணை ஆய்வாளர் திலீபன் மற்றும் போலீஸ் ஏட்டாக சிங்கம்புலி வருகிறார்கள். ஆனால் ஆனந்து நாகை சந்திக்க வந்த அந்த இருவரும் வீட்டுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையில் ஆனந்து நாகை சந்தித்தார்களா? ஏன் அந்த வீட்டுக்குள் சிக்கினர்? ஆனந்து நாக் குடும்பத்தின் நிலை என்ன? கொலைக்காரர் யார்? வீட்டுக்குள் சிக்கிய காவலர்களுக்கு என்ன ஆகிறது? என்பதே படத்தின் மீதி திரைக்கதை. நடிப்பில் வடிவுக்கரசி ‘கெழுவி’ கதாபாத்திரத்தில் அசத்துகிறார். ஆனந்து நாக், திலீபன், சிங்கம்புலி, கஜ ராஜா, அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நியாயப்படுத்தும் வகையில் நடித்துள்ளனர். கதைக்களம் திகிலூட்டும் வகையில் இருந்தாலும், இயக்குநர் கற்பனையில் அமைந்துள்ள ஒரு காட்சி நம்ப முடியாததாகவும், சற்று அருவருப்புணர்வு ஏற்படுத்தும்விதமாகவும் அமைந்துள்ளது. அதேபோல் சில இடங்களில் காட்சிகள் தேவையில்லாமல் நீளுவதால் தொய்வு தெரிகிறது. இயக்குநர் விஜய குமரன் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக சென்றிருக்கும். அனைவரின் நடிப்பு நேர்த்தியாக இருந்தாலும், படத்தில் பிரபல முகங்கள் குறைவாக இருப்பது வியாபார ரீதியில் ஒரு பின்னடைவாகவே தெரிகிறது. செல்லையா பாண்டியனின் இசை திகில் சூழலை உறுதியாக தாங்கி நிற்கிறது. A. மணிகண்டனின் ஒளிப்பதிவு ஓகே ரகத்தில் இருந்தாலும், படத்தின் இருள் சூழலை நன்றாகக் கொண்டு செல்கிறது. எடிட்டர் MS. கோபியின் பணி படத்தின் உயிரோட்டத்தை காக்க உதவியுள்ளது. மொத்தத்தில், திகில் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் ‘க்ராணி’-யை ஒரு முறை பார்க்கலாம். மதிப்பீடு: 3/5