பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ வீடியோ மூலம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
‘குஜிலிமஸ்து’ வீடியோ ஃபார்ட்டி கொண்டாட்டத்துடன் தொடங்கி, ‘அராஜகம் பத்தல பத்தல’ பாடலுடன் காதல், கல்லூரி, அடிதடி, கொண்டாட்டம் என படத்தின் பல்வேறு அம்சங்களை காட்சிப்படுத்துகிறது. இதில் பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இருவரும் வித்தியாசமான தோற்றங்களிலும் பரிமாணங்களிலும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ராவடி’, நகைச்சுவை, காதல், கல்லூரி பின்னணி மற்றும் கலகலப்பான சம்பவங்களை உள்ளடக்கிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இளமை துள்ளலுடன் கூடிய திரைக்கதை மற்றும் நகைச்சுவை தருணங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒகேனக்கல்லின் இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் படத்தின் காட்சியமைப்புக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஸில் ஜோசப், L. K. அக்ஷய் குமார் ஆகியோருடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பை மேற்கொள்ள, P. S. ஹரிஹரன் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே வெளியான ‘ராவடி’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ மற்றும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


