இளம் தலைமுறையினரின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையில் நிகழும் சுவாரஸ்யமான அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர்கள் தர்ஷன் மற்றும் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் உணர்ச்சிகள் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெறும் சில நொடிகளில் கதையின் உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், தெலுங்கு யூடியூப் பிரபலமான நாகா துர்கா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குநர் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக செல்வராகவன் நடித்துள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் டீசரில் தனித்துவமாக கவனம் பெற்றுள்ளது.
சென்னை மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், நகர்ப்புற பின்னணியில் அமைந்த காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியிருப்பதும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் திங்க் மியூசிக் நிறுவனம் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது.
வடசென்னையைச் சேர்ந்த FOXn இசையமைப்பாளர் ஜோடி இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், விரைவில் பாடல்கள் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா கவனித்துள்ளதுடன், தேசிய விருது பெற்ற என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
இறுதிக்கட்ட பின்னணிப் பணிகள் நடைபெற்று வரும் ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் ஜூலை 2026-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காதலும், கலாட்டாவும், நகைச்சுவையும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக இது ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


