
tamil news ➔ special articles ➔ kollywood newsBy Ottran Dorai|2025-11-30
சமூகச் செய்தியை சொல்கிறது ‘யாரு போட்ட கோடு’: இசை–டிரைலர் வெளியீட்டில் கலைஞர்கள் பாராட்டுகள்
டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘யாரு போட்ட கோடு’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லெனின் வடமலையின் இயக்கத்தில் பிரபாகரன், மேஹாலி மீனாட்சி நடித்துள்ள இந்த படம், சமத்துவத்தை மையப்படுத்திய சமூகக் கருத்தை பேசுகிறது. இப்படம் டிசம்பர் 12 அன்று உலகெங்கும் வெளியாகிறது.
விழாவில் தயாரிப்பாளர் டாக்டர் வினிதா கோவிந்தராஜன் பேசுகையில், “சவால்களால் நிறைந்த பயணமாக இருந்தாலும், அனைவரின் ஒத்துழைப்பால் படம் வெற்றிகரமாக உருவானது. படத்தின் கருத்து அனைவரையும் கவரும்,” என்றார்.
இயக்குநர் லெனின் வடமலை பேசியதாவது, “பதினாண்டுகளாக சந்தித்த கேலி, நையாண்டிகள் எல்லாம் எனக்கு காட்சிகள் மாதிரியே. பஞ்சபூதங்கள் பேதம் பார்க்காத போது மனிதன் மட்டும் ஏன் பார்க்க வேண்டும் என்பதே படத்தின் கேள்வி. சமத்துவத்தை பேசுவதற்காகவே ‘யாரு போட்ட கோடு’ உருவானது,” என உணர்ச்சியுடன் பகிர்ந்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் V.Z.துரை பேசியதாவது, “லெனின் இயல்பான மனிதர். பிரபாகரன் நல்ல மனசுக்காரர். அவரில் எதிர்காலத்தில் மக்கள் விரும்பும் ஹீரோவின் கவர்ச்சி இருக்கிறது,” என்று பாராட்டினார்.
காவல் துறை துணை ஆணையர் வலவன் பேசியதாவது, “சிறியவர்கள் பெரிய காரியத்தை செய்திருக்கிறார்கள். மேடையில் கேட்ட முதல் சத்தமே இந்த படத்துக்கு நல்ல வெற்றியை அறிவிக்கிறது,” என்று வாழ்த்தினார்.
இசையமைப்பாளர் செளந்தர்யன் பேசியதாவது, “இயக்குநர் லெனின் எழுதிய பாடல் வரிகள் ஆழமான சமூக உணர்வுடன் வந்திருக்கிறது. படம் நல்ல கருத்தை எடுத்துரைக்கிறது,” என்றார்.
நாயகன் பிரபாகரன் பேசியதாவது, “சமத்துவம் குழந்தைகளின் மனதில் இருந்து விதைக்கப்பட வேண்டும். நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள் உதவ வேண்டும்,” என்றார்.
நாயகி மேஹாலி மீனாட்சி பேசியதாவது, படக்குழுவின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். குழந்தை நட்சத்திரம் துகின் சே குவேரா, “அநீதிக்கு எதிராக எப்போதும் நிற்பேன்; இந்த படம் அதை கற்றுக் கொடுத்தது,” என்றார்.
‘யாரு போட்ட கோடு’ படத்தை தமிழகமெங்கும் பிரபல விநியோகஸ்தர் அஜய், ஃபிரைடே பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.
