சென்னையின் புறநகரில் நடக்கும் ஒரு வேன் விபத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உயிரிழக்கிறார்கள். இந்த விபத்துக்குப் பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது என்று சந்தேகிக்கும் போலீஸ் அதிகாரி ஆதித்யா மாதவன் அதை விசாரிக்கிறார். இதே நேரத்தில் மருத்துவராக பணியாற்றும் கவௌரி கிஷன் தனது மருத்துவமனையில் நடக்கும் சில வினோதமான விஷயங்களை கவனிக்கிறார். இந்த இரண்டு சம்பவங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பு பெறுகிறது என்பதே “அதர்ஸ்” படத்தின் கதை. இயக்குனர் அபின் ஹரிஹரன் இந்தப் படத்தில் மருத்துவ முறைகேடுகள், திருநங்கைகளின் வாழ்க்கை, சமூக பாகுபாடு போன்ற முக்கிய விஷயங்களை திரில்லர் கதையோடு கலக்க முயன்றிருக்கிறார். ஆதித்யா மாதவன் தனது முதல் படத்திலேயே போலீஸ் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். கவௌரி கிஷன் மருத்துவராக நம்பிக்கையளிக்கும் நடிப்பை கொடுத்துள்ளார். அஞ்சு குரியன், முனீஸ்காந்த் உள்ளிட்டவர்கள் தங்களுக்கான பங்குகளை சரியாக செய்துள்ளனர். ஒளிப்பதிவு அரவிந்த் சிங் — இரவு காட்சிகளில் நல்ல சாயலை கொடுத்திருக்கிறார். ஜிப்ரான் இசை சில காட்சிகளில் வலிமையாக இருந்தாலும் சில இடங்களில் சற்று அதிகமாகத் தெரிகிறது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக போகிறது. விசாரணை சீன்கள் சற்று நீளமாக இருந்தாலும், விறுவிறுப்பான காட்சிகள் அமைந்துள்ளதால் சலிப்பு தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் கதை இன்னும் சற்று சுவாரஸ்யமாக மாறுகிறது. இருப்பினும் கிளைமாக்ஸ் பகுதியில் வில்லன் மற்றும் சமூகச் செய்தியை இணைத்து சொல்லும் முயற்சி புதியதாக இருந்தாலும், அது மூன்றாம் பாலினத்தவரை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. “அதர்ஸ்” படத்தின் யோசனை நல்லது. சமூகத்தை சிந்திக்க வைக்கும் பல விஷயங்களை தொடுகிறது. ஆனால் திரைக்கதை இன்னும் சிறிது கூர்மையாக இருந்திருக்கலாம். அதுவும் புதுமுக இயக்குனரின் முயற்சியாக பார்க்கும்போது இது ஒரு நம்பிக்கையளிக்கும் ஆரம்பம். மொத்தத்தில் “அதர்ஸ்” – சமூக உணர்வும், திரில்லர் சுவையும் கலந்து வந்த ஒரு மிதமான படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் அல்லாமல் சென்றால், ஒருமுறை பார்க்கக்கூடியதாக இருக்கும். மதிப்பீடு: 3.25/5