வித்தியாசமான கதைகளில் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வரும் நடிகர் சத்யதேவ், தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளார். அவரது 16வது கதாநாயகன் படமாக உருவாகும் ‘சமவர்த்தி’ திரைப்படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிரடி மற்றும் சுற்றுச்சூழல் பின்னணியை இணைத்து உருவாகும் இந்த படம், வழக்கமான ஆக்சன் படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக “Ecological Action Thriller” என்ற புதிய ஜானரில் படம் உருவாகி வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பலர் ஆயுதங்களுடன் தாக்க வரும்போதும், சத்யதேவ் அமைதியாக ஹெட்போனில் இசை கேட்டு கொண்டிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. பின்னணியில் இடம்பெறும் புலி, காடு மற்றும் இயற்கை சார்ந்த காட்சிகள் படத்தின் மர்மமான உலகத்தை சுட்டிக்காட்டுகின்றன.
இந்த படத்தின் மூலம் சத்யதேவ் முழுமையான ஆக்சன் ஹீரோவாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. உடல் தோற்றம் முதல் திரை வெளிப்பாடு வரை புதிய மாற்றத்துடன் அவர் களமிறங்கியிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இயக்குநர் அஜய் நாக் வி இயக்கும் இந்த திரைப்படத்தை ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் திலீஷ் போத்தன், ராஜீவ் கனகாலா, கணவி லக்ஷ்மண், ரவீந்திர விஜய் மற்றும் மோகன் பகத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையை சிஞ்சித் யெர்மில்லி அமைக்க, ஹர்ஷா மல்லிகார்ஜுன் மற்றும் தேவ் தீப் காந்திகுண்டு ஒளிப்பதிவு செய்கின்றனர். ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் மூலம் கவனம் ஈர்த்துள்ள ‘சமவர்த்தி’, அடுத்தடுத்த அப்டேட்களால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


