
tamil news ➔ tollywood newsBy sivan|2024-12-26
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூபாய் 2 கோடி: புஷ்பா 2 பட குழுவினர் அறிவிப்பு!
ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி திரையிடப்பட்ட புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு காவல் துறையின் அனுமதி பெறாமல், திடீரென்று அல்லு அர்ஜுன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் மரணமடைந்தார். அவரின் 8 வயது மகனும் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் சிறுவனைக் காண நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் தில் ராஜு உள்பட சிலர் மருத்துவமனைக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அல்லு அரவிந்த் கூறியதாவது, ``காயமடைந்த சிறுவன் குணமாகி வருகிறார். தற்போது தானாக சுவாசிக்கிறார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அவர்களின் குடும்பத்தை ஆதரிக்கும் வகையில், அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடியும், புஷ்பா 2 தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரூ. 50 லட்சமும், இயக்குனர் சுகுமார் ரூ. 50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர். சட்டரீதியான கட்டுப்பாடுகளால்தான் முன்அனுமதி இல்லாமல் அவர்களைக் காண முடியவில்லை'' என்று தெரிவித்தார்.
மேலும், திரைத்துறைக்கும் அரசுக்கும் இடையிலான உறவை வளர்க்கும் வகையில், வியாழக்கிழமை (டிச. 26) முதல்வர் ரேவந்த் ரெட்டியை திரைப்படத் துறைக் குழுவினர் சந்தித்து பேசவுள்ளதாக தில் ராஜு கூறினார்.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் டிச. 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.
