
tamil news ➔ kollywood newsBy sivan|2025-03-21
எஸ் ஜே சூர்யாவின் நியூ படத்திற்கு நான் ரசிகன்! - சுராஜ் வெஞ்சரமூடு!
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வீர தீர சூரன்'. இப்படத்தை சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் துஷரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை (மார்ச் 20) படத்தின் டிரெய்லர் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இந்நிலையில், முதலில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா நேற்று (மார்ச் 20) சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. இதில் நடிகர் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், இயக்குநர் அருண்குமார், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் சுராஜ் வெஞ்சராமுடு பேசியதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், எனக்கு தமிழும், தமிழ் சினிமாவும் ரொம்ப பிடிக்கும். இந்த விழாவில்தான் ஜி.வி. பிரகாஷ் சாரை நான் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் சார். நானும் உங்கள் ரசிகன் தான். உங்கள் இசையில் வெளியான 'கோல்டன் ஸ்பேரோ' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி. அவர் தங்கமான மனிதர். அவருடைய இயக்கத்தில் வெளியான 'சித்தா' படத்தை பார்த்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன்.
இந்த படத்தில் பணியாற்றிய போது 'சித்தா' படத்தை விட வேற லெவலில் அவருடைய உழைப்பு இருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகனாகவும் மாறிவிட்டேன். இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழை பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமே இயக்குநரும், இந்த படக் குழுவினரும் தான். இந்தப் படம் வெளியான பிறகு இயக்குநருக்கு நான் மலையாளம் சொல்லித் தருவேன்.
விக்ரம் சார் மிகப் பெரிய நடிகர் என அனைவருக்கும் தெரியும். அவருடன் நடிக்கும்போது அவர் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு வரிசையாக நினைவுக்கு வந்தது. அதுபோன்ற கதாபாத்திரத்தை எல்லாம் இவர் தானே நடித்தார்..! என்று அவரை நான் வியந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். விக்ரம் சார் ஐ லவ் யூ. நானும் உங்களின் ரசிகன் தான்.
எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான 'நியூ 'படம் பார்த்த பிறகு அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். அதற்குப் பிறகு அவர் வெரைட்டியான கேரக்டரில் நடித்தார். பிறகு அவருடைய நடிப்பிற்கும் நான் ரசிகன் ஆகிவிட்டேன். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் வைத்திருப்பார். அதுவும் எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பில் வெளியான 'இறைவி' படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன்.
எனக்கு முன்று குழந்தைகள் இருக்கிறது. முதல் குழந்தை பிறந்தபோது முதல் ஸ்டேட் விருது கிடைத்தது. இரண்டாவது குழந்தை பிறந்தபோது இரண்டாவது ஸ்டேட் விருது கிடைத்தது, மூன்றாவது குழந்தை பிறந்தபோது ஒரே ஆண்டில் ஸ்டேட் மற்றும் நேஷ்னல் விருது கிடைத்தது. இனிமேல் ஆஸ்கர் விருது கிடைக்கனும் அப்படினா நான்காவது குழந்தை பெத்துக்க நான் தயார் என கூறி உள்ளார்.
