சேத்தன்,அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்தி வேல் இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். காதல் தோல்வியால் குடி பழகத்திற்கு ஆளாகி சுற்றி கொண்டிருக்கிறார் அதர்வா. கால் கட்டு போட்டால் சரியாகும் என்று நினைக்கும் பெற்றோர்கள் சற்று மனகுறைவு இருக்கும் நிமிஷாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். அதர்வாவும் திருந்தி குடும்பம், வேலை என்று இருக்கிறார். சில மாதங்களில் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கிறது. மருத்துவ மனையில் குழந்தை பிறந்த சில நிமிடங்கள் கழித்து தன் குழந்தையை பார்க்கும் நிமிஷா "இது என் குழந்தை இல்லை" என்று கத்தி கூச்சல் போடுகிறார். குடும்பத்தினரும், மருத்துவ மனை நிர்வாகமும் இதை ஏற்க மறுக்கிறார்கள். அதர்வா குழந்தையின் ரத்த மாதிரியை எடுத்து DNA டெஸ்ட்க்கு அனுப்புகிறார். சில நாட்களில் இது இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி DNA ரிசல்ட் வருகிறது. இவர்களுக்கு பிறந்த குழந்தை என்ன ஆனது? என்பதை ஒரு மெடிக்கல் கரைம் திரில்லர் பின்னணியில் சொல்வது தான் படத்தின் கதை. திரைக்கதையைப் பொறுத்தவரையில் முதல் அரை மணி நேரம் படம் வழக்கமான கதையாகவே நகருகிறது. ஆனால் படம் தொடங்கி அரைமணி நேரத்திற்கு பிறகு பரபரப்பாக நகரும் திரைக்கதையில் நாம் எதிர் பார்க்காத பல ட்விஸ்ட்கள் உள்ளன. இரண்டாம் பாதி திரைக்கதை மிக சுவாரசியமாகவே நகர்கிறது. ஆனாலும் காயத்ரியின் குத்து பாட்டு தேவை இல்லை என்று தான் தோன்றும். நடிப்பில் நம் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது நிமிஷா தான். வெகுளியாக வரும் போதும் சரி, குழந்தை தனது இல்லை என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போதும் சரி, வளர்த்த குழந்தையை பிரிய மனமில்லாமல் தவிக்கும் போதும் சரி நடிப்பில் ஆஹா சொல்ல வைக்கிறார். அதேபோல் பாலாஜி சக்தி வேல், மூன்று வாரங்களில் பணி ஓய்வு பெறும் ஏட்டையாவாக தனது பருமனான உடலில் அற்புதமான உடல் மொழியால் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார். கட்டாயம் தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ஆக்ஷன், எமோஷன் இரண்டையும் கலந்து தந்திருக்கிறார் அதர்வா. இந்த படத்தின் வசனங்கள் மிக மிக முக்கியமானவை. உளவியல் ரீதியாக அனைவர் வாழ்விலும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக தப்பு செய்தவன் யாரும் தப்பிப்பது இல்லை. தண்டனைகள் தள்ளிப் போகிறது என்ற நச் வசனமாகட்டும், குழந்தைக்காக தவம் இருக்கும் தம்பதிகள் இருக்கும் இதே நாட்டில் தான் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் நிறைய பேர் இருக்காங்க" என வரும் வசனமும் நம்மை யோசிக்க வைக்கிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சியில் வரும் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்து நம் அனைவரையும் எழுந்து நின்று கைதட்ட வைக்கும் அளவில் உள்ளது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், போதை மருந்து கடத்தல், கேங்ஸ்டர் படங்கள் வந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், நாம் அடிக்கடி செய்திகளில் பார்த்துவிட்டு கடந்து போகும் சாதாரண விஷயமான 'மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் கடத்தல்' என்ற ஒன் லைனில் ஒரு மாறுபட்ட மெடிக்கல் கிரைம் திர்ல்லர் படத்தை தந்துள்ளார். இந்த படத்தின் குறையாக பார்க்கப்படுவது தேவையில்லாமல் வரும் ஒரு குத்து பாடல். அதை தவிர்திருக்கலாம். இந்த ஆண்டு தமிழில் வெளியான குடும்பஸ்தன், ட்ராகன், டூரிஸ்ட் பேமிலி பட வரிசையில் DNA படமும் மக்கள் விரும்பும் படமாக அமையும் என்பது நிதர்சனமான உண்மை.