
tamil news ➔ kollywood newsBy sivan|2025-05-26
11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினியுடன் கை கொடுக்கும் இந்த காமெடி நடிகர்
தமிழ் திரையுலகில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது, ஜெயிலர் 2. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்த பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த், 'முத்து வேல் பாண்டியன்' என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதில் ரஜினிகாந்திற்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். கேமியோ கதாப்பாத்திரங்கிள் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட் உடன் முதல் பாகம் முடிந்திருந்ததது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் நெல்சனும் அனிருத்தும் ரஜினிகாந்துடன் இடம் பெற்றிருந்தனர்.
ஜெயிலர் படத்தின் முதல் பாகம் போல, இரண்டாம் பாகத்திலும் பல சர்ப்ரைஸ்கள் காத்திருப்பதாக நெல்சன் முதலில் கூறியிருந்தார். அந்த வகையில், இப்படத்திலும் ஒரு நடிகர் சர்ப்ரைஸ் கதாப்பாத்திரமாக இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, சந்தானம்தான்.
காமெடி நடிகராக இருந்த சந்தானம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று முடிவெடுத்து, அப்படியே நடித்து வருகிறார். அதற்கு முன்னர் அவர் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியனாக இருந்து வந்தார். சமீபத்தில் சிம்புவின் 49வது படத்தில் அவருடன் முக்கிய காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதே போல இப்போதும், ஜெயிலர் 2 படத்தில் அவர் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மை தகவல்தானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம், காமெடியனாக இருந்த போது அவர் இணைந்து நடித்த ஹீரோக்களுள் ஒருவர், ரஜினிகாந்த். அவரது எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு அசிஸ்டண்டாக சிவா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அவர் செய்த காமெடிகள் பெரிதாக ஹிட் ஆகின. இதைத்தொடர்ந்து, ரஜினியுடன் லிங்கா திரைப்படத்திலும் இணைந்தார். இந்த படத்தில் அவர் ரஜினியின் திருட்டு கும்பலில் ஒருவராக இருந்தார். படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும், சந்தானத்தின் காமெடி பெரிதாக பேசப்பட்டது. இந்த படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆகிறது. இதற்கு பிறகு அவர் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் இணைவது குறிப்பிடத்தக்கது.
