அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர் ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது.
குட் பேட் அக்லி: ஏகேவின் ரசிகர்கள் விடாமுயற்சி பற்றிய அப்டேட்டை எதிர்பார்த்திருந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காதவகையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கி நடந்துவருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் விடாமுயற்சிக்கு என்னதான் ஆச்சு என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்திருக்கின்றனர்.

ஜப்பான் செல்லும் படக்குழு: இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும்; அதற்காக படக்குழு ஜப்பான் செல்லவிருப்பதாகவும் ஒரு தகவல் எழுந்திருக்கிறது. குட் பேட் அக்லி பட ஷூட்டிங் துரிதமாக நடந்தாலும் விடாமுயற்சியை நினைத்துதான் சோகத்தில் இருக்கிறார்கள் ஏகே ரசிகர்கள். ஏனெனில் மகிழ் திருமேனி அஜித்தை வைத்து எப்படி படம் எடுத்திருக்கிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள். ஆனால் விடாமுயற்சி என்ன ஆனதென்றே தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்புகூட ஒருதகவல் பரவியது. அதாவது விடாமுயற்சி ஷூட்டிங் 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம்தான் இருக்கிறது. எனவே விரைவில் ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்த வருடத்துக்குள் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மகிழ் திருமேனி ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் போகிற போக்கை பார்த்தால் விடாமுயற்சி நிலைமை என்னவாகுமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.