
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy Sumithra Dorai|2023-08-12
வான் மூன்று திரை விமர்சனம்
அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாச்சலம், டில்லி கணேஷ், லீலா சாம்சன் ஆகியோரது நடிப்பில், வினோத் குமார் சென்னியப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "வான் மூன்று".
காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணுக்கும், இளைஞனுக்கும் இடையே மலர்கின்ற மறுகாதல், திருமணமாகி 10 மாதங்கள் ஆன தம்பதி மற்றும் வயதான தம்பதி ஆகியோரது வாழ்க்கை மற்றும் அவர்களுடைய காதலை சொல்வது தான் ‘வான் மூன்று’.
தற்போதைய வேகமான உலகத்தில், தங்களுக்கு அருகே இருப்பவர்களை வேகமாகவே கடந்துவிடுகிறோம். ஆனால், திடீரென்று ஒரு நாள் அவர்கள் நம்மை விட்டு பிரிய வேண்டிய நேரம் வரும் போது தான் அவர்கள் மீதான காதல் வெளிப்படும். அப்படிப்பட்ட மூன்று காதல் கதைகளை கவிதைப்போல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ்.
காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆதித்யா பாஸ்கர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அம்மு அபிராமியின் மூலம் மனம் மாறுவதும், அம்மு அபிராமி தனது கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்குவதும், அறியாத வயதில் காதலித்து கஷ்டப்படும் இளைஞர்களுக்கு நல்ல பாடம். இருவரும் தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
திருமணமாகி 10 மாதங்கள் ஆன நிலையில் தனது காதல் மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் வினோத் கிஷன் மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம் தம்பதி முதிர்ச்சியான காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். உயிருக்கு போராடும் மனைவியின் நிலையை எண்ணி எப்போதும் இருக்கமாக இருக்கும் வினோத் கிஷன், உயிரோடு இருப்பேனா?, இல்லையா? என்று தெரியாமல் கலங்கும் அபிராமி வெங்கடாச்சலம் இருவரது நடிப்பும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
டில்லி கணேஷ் - லீலா சாம்சன் தம்பதியின் காதல் விட்டுக்கொடுத்து போகும் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறது. தான் இறக்கப் போவதை விட, தனக்குப் பிறகு தனது கணவரை யார் பார்த்துக்கொள்வார் என்ற கவலை இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அவரை தேற்றும் காட்சிகளில் லீலா சாம்சன் அசத்துகிறார். மறுபக்கம், மனைவியை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவருடன் இயல்பாக பேசும் காட்சிகளில் டில்லி கணேஷ் மிரட்டுகிறார்.
முழுப்படமும் மருத்துவமனையில் நடக்கிறது. ஒரே இடத்தில கதை நகர்ந்தாலும் மூன்று காதல் கதைகளை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஆர் 2 பிரதர்ஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டுமானது அல்ல, அது அனைத்து வயதினருக்கும் பொதுவானது என்பதை சொல்லும் வகையில், அனைத்து வயதினரும் ரசிக்க கூடிய ஒரு அழகான காதல் கதையை எளிமையாகவும், எதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.எம்.முருகேஷ்.
படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் எந்த ஒரு இடத்திலும் அதிகமாக நடிக்காமல், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது மிக சிறப்பு.
மூன்று வெவ்வேறு விதமான காதலை அழகாக சொல்லியிருக்கும் இயக்குநரை தமிழ் திரையுலகம் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும்.
