
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy sivan|2025-07-25
மாரீசன் திரைவிமர்சனம்
வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வரும் தயாளன் (பகத் ஃபாசில்) மீண்டும் தனது திருட்டுத் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறான். அப்போது ஒரு வீட்டில் தனது கைவரிசையை காட்ட வரும் போது, வேலாயுதம் (வடிவேலு) கையில் விலங்குடன் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து, அவரிடம் பேச்சுக் கொடுக்கிறான். எனக்கு அல்ஸைமர் நோய் இருக்குப்பா, என் மகன் இப்படி என்னை கட்டிப்போட்டு வச்சிட்டு போயிடுறான். என் பேங்க் அக்கவுண்ட்ல நிறைய பணம் இருக்கு, நீ என்னை வெளியே கூட்டிட்டுப் போனால், உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன் என்றதும், வடிவேலுவிடம் இருக்கும் மொத்த பணத்தையும் ஆட்டையைப் போட பகத் ஃபாசில் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு செல்கிறான். உண்மையிலேயே வடிவேலு யாரு? பகத் ஃபாசில் யாரு? என்கிற ட்விஸ்ட்களுடன் 2ம் பாதியின் கதை ஆரம்பிக்க படம் சூடு பிடிக்கிறது.
கதை மிக வலுவாக இருந்தாலும், திரைக்கதையில் அதிலும் குறிப்பாக முதல் பாதியில் நம்மைப்படுத்தி எடுத்து விடுகிறது. இவர்கள் இருவரின் பயணம் நம் பொறுமையை சோதனை செய்து விடுவதால், முதல் பாதியில் முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஆனால் கோவை சரளா வந்தவுடன் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது, இரண்டாம் பாதி கதை முற்றிலும் வேறு ஒரு கதையாக வேறு ஒரு தளத்திற்கு பயணிக்கிறது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
படத்தில் நடிகர்களான பகத் பாசில் வடிவேலு போட்டி போட்டு நடித்துள்ளனர். யார் மிகையாக நடிக்கிறார்கள் யார் குறைவாக நடிக்கிறார்கள் என்று ஒப்பிடும் அளவிற்கு இல்லாத ஒரு எதார்த்தமான நடிப்பு. விவேக் பிரசன்னாவும் சரி, கோவை சொல்லவும் சரி மீண்டும் ஒரு எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.
படத்திற்கான இசை யுவன் சங்கர் ராஜா. ஆனால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நேத்து ஒருத்தர ஒருத்தர் பாத்தோம் பாடல் கொஞ்சம் ஆறுதல்.
படத்தின் ஒளிப்பதிவு மிகவும் எதார்த்தமாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
இந்த படத்தின் இயக்குனர் சுதீஷ் சங்கர், மலையாளத்தில் நிறைய சீரியல் எடுத்த இயக்குனர் என்ற காரணத்தினாலோ என்னவோ முதல் பாதியை சீரியல் மாதிரியே எடுத்து வைத்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியை சினிமாவாக எடுத்து மிரட்டியுள்ளார்.
ஆக மொத்தத்தில் மாரீசன் படம் முதல் பாதி சோதனையாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கூறப்படும் கருத்தும் நடிப்பும் நம்மை ஆச்சரியத்தில் மிரள வைக்கும்.
