
tamil news ➔ special articles ➔ kollywood newsBy Ottran Dorai|2025-09-02
பப்ளிசிட்டி விரும்பி KPY பாலாவுக்கு திரை துறையில் கதாநாயகன் அந்தஸ்து கிடைக்குமா?
இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், 'வீடு' அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் "காந்தி கண்ணாடி" திரைப்படத்தில், "கலக்கப் போவது யார்(KPY)" என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமான பாலா என்கிற KPY பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார்.
கலக்கப்போவது யார் என்ற ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமாக இருந்தாலும், பாலாவுக்கு திரை துறையில் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில படங்களில் மட்டும், சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பாலா.
தனக்கு பட வாய்ப்புகள் பெரியதாக இல்லாத போதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு தனக்கு தேவையான வருமானத்தை நன்றாகவே ஈட்டி வந்திருந்தார் பாலா.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி வந்த நிலையிலும், திரைத்துறையில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறல் பாலாவுக்குள் இருந்து வந்தது. தன் நிலைமையைப் பற்றி அவ்வப்போது தன்னுடைய நெருங்கிய நண்பரான சின்ன திரை நடிகர் அமுதவாணன் மற்றும் வேறு சில நெருங்கிய நண்பர்களுடன் மனக்குமுறலாக தெரிவித்து வந்துள்ளார் பாலா. அப்போது அவருடைய நண்பர் அமுதவாணன் மற்றும் மற்ற நண்பர்கள் அவரை அரசியலில் ஈடுபடும்படி அறிவுறுத்தி வந்தனர். உடனடியாக ஏதாவது அரசியல் கட்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், அரசியல் கட்சிகளில் பெரிய அங்கீகாரம் கிடைக்காது என்பதை நன்கு அறிந்து அரசியலை நிராகரித்தார் பாலா.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் பாலாவை பிரபலமாக்க முடிவெடுத்தார் அமுதவாணன். அப்போது அமுதவாணன் நினைவுக்கு முதலில் தோன்றியது, ஹைதராபாதில் வசித்து வரும் ஹர்ஷா சாய் என்ற யூடியுப் பிரபலம் தானம். பாலாவை பிரபலப்படுத்த, ஹர்ஷா சாய் போல சமூக சேவகர் என்கிற பாதையை தேர்ந்தெடுத்து கொடுத்ததே அமுதவாணன் தானாம். முதல் கட்டமாக சாலை ஓரங்களில் உறங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உணவு, பாய் மற்றும் போர்வை என அவர்களுக்கு வழங்கி வந்தார் பாலா. இந்த சேவையை வெளி உலகத்திற்கு தன் மூலமாக பப்ளிசிட்டி செய்யாமல், அமுதவாணன் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக பொதுமக்கள் போல் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அதற்கு ஒரு செய்தி குறிப்பை தயார் செய்து அவர்கள் மூலமாகவே சமூக வலைதளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வரவைத்தார் பாலா.
பாலா பிரபலமான நடிகர் இல்லை என்பதனால் அனைவரும் பாலா செய்துவந்த செயலை சமூகசேவையாகவே பார்த்தார்களே தவிர அதன் பின்னால் இருக்கும் பப்ளிசிட்டியை கவனிக்கவில்லை.
சமூக வலைத்தளத்தில் தன்னுடைய நண்பர்கள் பதிவிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்தி குறிப்புகளுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் இடத்தில் நல்ல வரவேற்பு பெற்று வர, பாலா பப்ளிசிட்டியை விரும்ப ஆரம்பித்தார். இந்த பப்ளிசிட்டி தனக்கு கண்டிப்பாக கை கொடுக்கும் என்பதை உணர்ந்த பாலா, 'நாடோடிகள்' திரைப்படத்தில் வரும் உடனடி பேனர் காட்சிகளை நினைவுபடுத்தும் விதமாக பாலாவின் செயல்கள் ஆரம்பித்தது. அதாவது பாலா தான் எங்கு சென்று சமூக சேவையில் ஈடுபட்டாலும் அதை உடனடியாக அவருடைய நண்பர்கள் மூலமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதை ஊடகத்தினரிடம் பகிர்ந்து, அதை செய்தியாக்கினார் பாலா மற்றும் அவருடைய நண்பர்கள்.
செய்தி பஞ்சத்தில் இருந்த ஊடகத்தினர், பாலாவின் சமூக சேவை ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் ஆக இருந்தாலும், அதை செய்தியாக்கி பாலாவையும், பாலாவின் சமூக சேவையையும் பட்டி தொட்டி எங்கும் சென்றடைய செய்தனர். பாலாவின் சமூக சேவையும் அவரது பப்ளிசிட்டி ஸ்டண்டும் அறவே பொதுமக்களிடம் சென்றடைந்து பாலாவுக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. பாலாவின் சமூக சேவை ஒருவிதத்தில் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்பதை திரை பிரபலங்கள் அறிந்திருந்தாலும், அவருடைய சேவையை பற்றி சில திரை பிரபலங்கள் மேடையில் பேசினர். இந்த திரை பிரபலங்களின் மேடைப்பேச்சு KPY பாலாவுக்கு ஒரு பெரிய இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமின்றி, பாலாவுக்கு ஒரு பெரிய மைலேஜ் கொடுத்தது.
பாலாவின் சமூக சேவை மற்றும் பப்ளிசிட்டி ஸ்டண்ட், நடிகர் ராகவா லாரன்ஸ் பாலாவை பாராட்டு பேசும்படி ஆக்கிவிட்டது. பாலாவின் சமூக சேவைக்கு, தன்னால் முடிந்த பொருளாதார உதவியை தானும் இணைந்து செய்ய விரும்புவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் வெளிப்படையாகவே சொன்னார்.
ராகவா லாரன்ஸ் மற்றும் சில திரை பிரபலங்கள் KPY பாலாவை பற்றி உயர்த்தி பேசவே பாலா இன்னும் பிரபலம் ஆகினார். பாலா பற்றி பலரும் பேசி வந்த நிலையில், பாலாவை தேடி பலரிடமிருந்து நன்கொடைகள் கொட்ட ஆரம்பித்தது. 'ஊரான் வீட்டு நெய் என் பொண்டாட்டி கை' என்ற பழமொழிக்கேற்ப பாலா தான் பெற்ற நன்கொடையை பொதுமக்கள் சேவைக்கு செலவழித்து தன் பெயரை நிலை நிறுத்திக் கொண்டார். இந்தப் பப்ளிசிட்டியை வைத்துக்கொண்டு, தான் திரைப்பட கதாநாயகன் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் இறங்கினார் பாலா.
"காந்தி கண்ணாடி" திரைப்படத்தில் கதை முழுவதும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோர் மீது பயணித்து வருகிறது. வர்த்தக ரீதியாக படத்திற்கு ஒரு கதாநாயகன் மற்றும் கதாநாயகி தேவை என்பதை அறிந்த இயக்குநர் ஷெரிப், சமீப காலமாக ஊடகங்களில் சமூக சேவை மூலமாக பேசப்பட்டு வந்த KPY பாலாவை நடிக்க வைக்கலாம் என்பதை அறிந்து இப்படத்தில் பாலாவை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ளார் இயக்குநர் ஷெரிப்.
பாலாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தியை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஷெரிப்.
"காந்தி கண்ணாடி" படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேலும், அர்ச்சனாவும் இருந்து வந்தாலும், இளைஞர்களை கவரும் விதமாக இப்படத்தில் பாலாவின் கதாபாத்திரம் திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை. கதையின் தன்மை எங்கும் சொதப்பல் ஆகி விடக் கூடாது என்பதை நன்கு அறிந்து, படத்திற்கு திரை கதையை அழுத்தமாக எழுதி உள்ளாராம் இயக்குநர் ஷெரிப். இருப்பினும் படத்தின் ஓட்டம் மிகவும் தொய்மையாக இருக்கிறதாம்.
செப்டம்பர் 5ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் "காந்தி கண்ணாடி" திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகும் பாலா, நாயகனாக தேர்வாவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். KPY பாலா திரைத்துறையில் கதாநாயகனாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.
