கடந்த ஆகஸ்ட் மாதம் 70-ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (அக்டோபர் 8 ஆம் தேதி), புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் சினிமாவில் சிறந்த படைப்பு மற்றும் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பட்டியல்களின் கீழ் தேசிய விருது பெற்ற பிரபலங்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வருகிறார்.

விருது விழா குறித்து வெளியான தகவலின் படி, இன்று மாலை 4:00 மணிக்கு தேசிய விருது விழா தொடங்கியது. இதில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த 70-ஆவது தேசிய விருது விழா நிகழ்ச்சியில்.... சமீபத்தில் தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றதாக அறிவிக்கப்பட்ட மிதுன் சக்ரவர்த்திக்கும் விருது வழங்கப்பட்டது . மேலும் தென்னிந்திய திரையுலகில், தேசிய விருது அறிவிக்கப்பட்ட அனைத்து பிரபலங்களும் விருது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறிப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும், 70வது தேசிய திரைப்பட விருதுகளில்... பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும், சுமார் 4 தேசிய விருதுகளை பெற்றது.அதன்படி சிறந்த இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தட்டிச் சென்றார். இதுதவிர சிறந்த ஒலியமைப்புக்கான விருதும் பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும்,அதே போல் சிறந்த தமிழ் படத்திற்கான விருதையும், பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் வென்றுள்ளது. இதற்கான விருதுகளை, இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 4 பிரபலங்களும் பெற்றுக்கொண்டனர்.