தென்னிந்திய சினிமா டெலிவிஷன் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் (SICTADAU) கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உறுப்பினர் நீக்க உத்தரவு சட்டவிரோதம், செல்லாதது மற்றும் பூஜ்யம் என சென்னை நகர சிவில் நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. சங்க உறுப்பினர் வி.தாசரதி தாக்கல் செய்த சிவில் வழக்கில், XVII உதவி நீதிபதி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் மூலம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட எதிர் தரப்பினர், 30.05.2016 அன்று தாசரதியின் முதன்மை உறுப்பினர் பதவியை ரத்து செய்திருந்த நிலையில், அந்த உத்தரவு சட்டப்படி நிலைநிறுத்த முடியாதது என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், மனுதாரரின் சங்க உறுப்பினர் உரிமைகளில் தலையிடக் கூடாது என்றும், அவரது பணிவாய்ப்புகள் மற்றும் சங்க சலுகைகளைத் தடுக்கக் கூடாது என்றும் நிரந்தர தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்த தரப்பினருக்கும் செலவுகள் விதிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 12.12.2025 அன்று வழக்கு முடிவடைந்து, செலவில்லா தீர்ப்பாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக டப்பிங் கலைஞர்கள் பலர் இந்த டப்பிங் சங்கத்தினால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்காலிக நீக்கம் மற்றும் நிரந்தர நீக்கம் என சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாள் வரை இந்த சங்கத்தின் தலைவரான ராதாரவி, செயலாளர் கதிரவன் பாலு ஆகியோரின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. இவர்கள் சொல்லுவதே சட்டம் என இருந்து வந்த நிலையில், அவரை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் நாடியுள்ளனர். அதில் இப்போது நீதிமன்றம் மூலமாக வெற்றி பெற்றுள்ளார் டப்பிங் கலைஞரும் நடிகருமான தாசரதி. இந்த நீதிமன்ற தீர்ப்பு தற்போது தென்னிந்திய சினிமா டெலிவிஷன் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் (SICTADAU) நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும், அது வரவிற்கும் அச்சங்க தேர்தலில் தற்போது நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்.